சாங்கிய யோகம்

அர்ஜுனன் தனது குருக்கள், உறவினர்கள், நண்பர்களுடன் போரிட வேண்டியிருப்பதால் போர்க்களத்தில் போரிட மறுக்கிறான். அவர் போரின் விளைவுகளைப் பற்றி யோசித்து சோகத்தில் மூழ்கினார். அவர் தனது வில் மற்றும் அம்புகளை கீழே வைத்து, கிருஷ்ணரிடம் தான் போரிட மாட்டேன் என்று கூறுகிறார்.

பரிதாபம், துக்கம் நிறைந்த மனமும், கண்களில்  கண்ணீரும் கொண்ட அர்ஜுனனைப் பார்த்ததும்  ஸ்ரீ கிருஷ்ணர் பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் “அன்புள்ள அர்ஜுனா! இந்த சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில், உனக்கு இந்த மனக்குழப்பம் எங்கிருந்து வந்தது? இந்த குழப்பம் உயர்ந்த மரியாதையும் ஒழுக்கமும் கொண்ட மனிதனுக்கு பொருந்தாது. இது உனக்கு அவமானத்தை ஏற்படுத்துவதோடு, சொர்க்கத்திற்கான பாதையையும் அடைத்துவிடும்.”

கிருஷ்ணா நிலைமை மோசமாக உள்ளது என்கிறார். ஏனென்றால் சங்கு ஊதுவது போரின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பரீட்சை ஹாலில் வினாத்தாளைப் பெற்ற பின், இந்த பாடத்தை நான் எடுத்திருக்கக் கூடாது என்று நினைக்கத் தொடங்குவது போல, அர்ஜுனன் பின்விளைவுகளைப் பற்றி தாமதமாக சிந்திக்கிறான்.  அர்ஜுனன் இந்தப் போரிலிருந்து பின்வாங்கினால், அது அவனைப் போன்ற க்ஷத்திரியனுக்கு அவமானம்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் “அர்ஜுனா! போரில் எதிரிகளைத் தவிக்க விடும் மாபெரும் வீரன் நீ! கோழை போல் நடந்து கொள்ளாதே; அது உனக்கு சிறிதும் பொருந்தாது. உன் அற்பமான மனத்தளர்ச்சியை கைவிட்டு எழு!!”

அர்ஜுனன் “கிருஷ்ணா! மது என்ற அரக்கனை அழித்தவனே! எனது வழிபாட்டிற்குரிய பாட்டனார் பீஷ்மரும், குரு துரோணாச்சாரியாரும் என் எதிரிகளுடன் இருக்கிறார்கள். போரில் நான் எப்படி என் அம்புகளால் அவர்களைத் தாக்க முடியும்?”

அர்ஜுனன் சொல்கிறார் “துரோணர், கிருபாச்சாரியார் மற்றும் பீஷ்மர் ஆகியோர் உன்னத குருக்கள் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் (மஹாஅனுபவான்). அவர்களைக் கொன்று வாழ்க்கையை அனுபவிப்பதை விட, இந்த உலகில் பிச்சை எடுத்து உணவை உண்பது நிச்சயமாக சிறந்தது. நாம் அவர்களைக் கொன்றால், நாம் அனுபவிக்கும் பொருட்களிலும், இன்பங்களிலும் அவர்களின் இரத்தக் கறையே படிந்திருக்கும்.”

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர். பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள் (அவர்கள் 5 பேர்) மற்றும் திருதராஷ்டிரரின் மகன்கள் கௌரவர்கள் (அவர்கள் 100 பேர்). பாண்டுவும், திருதராஷ்டிரரும் சகோதரர்கள். அர்ஜுனன் பாண்டவர்களில் ஒருவன்.

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சொல்கிறார், “இந்தப் போரின் முடிவில் நாம் அவர்களை வெல்லலாம் அல்லது அவர்கள் நம்மை வெல்லலாம். இந்த இரண்டில் எது சிறந்தது என்று தெரியவில்லை. இந்த திருதராஷ்டிரப் புத்திரர்களைக் கொன்றுவிட்டு நாம் நிச்சயமாக வாழ விரும்பவில்லை. ஆனாலும் அவர்கள் இந்தப் போர்க்களத்தில் நம்மை எதிர்த்துப் போரிட நம் முன் நிற்கிறார்கள்.”

விளக்கம்: அர்ஜுனன் முரண்பட்டதாக உணர்கிறான், ஏனென்றால் தான் வென்றாலும், அந்த வெற்றி தனது அன்புக்குரியவர்களை கொன்றதன் மூலமே கிடைக்கும். அது அவருக்கு எந்த மகிழ்ச்சியையும் கொடுக்காது.  அன்புக்குரியவர்களை கொல்லும் எண்ணம் அவருக்கு துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது.

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறுகிறார், “இரக்கத்தால் எனது இயல்பான க்ஷத்திரிய குணங்களை இழந்து விட்டேன். என் மனம் என் கடமையைப் பற்றிக் குழம்புகிறது. எனக்கு எது முற்றிலும் நல்லது என்று உறுதியாகச் சொல். நான் உன் சீடன். உன்னிடம் சரணடைந்தேன். தயவுசெய்து எனக்கு  வழிகாட்டு!”

விளக்கம்: அர்ஜுனன் ஒரு க்ஷத்திரியனாக தன் கடமைக்கும், தன் குடும்பத்தின் மீதான கருணைக்கும் இடையே உள்ள மனப்போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறான். இப்போது அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்து வழிகாட்டுதலை நாடுகிறான்.

இந்தப் போர் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது நாம் வாழும் சூழலும், நமது வாழ்க்கை முறையும் காலப்போக்கில் வியத்தகு முறையில் மாறிவிட்டது. ஆனால் மனித மனமும், மனப்போராட்டங்களும் அப்படியே இருக்கின்றன.  வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அர்ஜுனனைப் போல் நாம் அனைவரும் முடிவு செய்ய முடியாமல் தவித்து, வழிகாட்டுதலை நாடுகிறோம்!

அர்ஜுனன் சொல்கிறார் “எதிரிகள் யாரும் இல்லாத, எல்லா வளங்களையும் உடைய பூமியின் ராஜ்ஜியம் கிடைத்தாலும், தேவலோகத்தையே ஆளும் பேறு கிடைத்தாலும், என் உடலின் புலன்களையும், என் மனதையும் உலர்த்தி வாட்டும் விசனத்தை (சோகத்தை) போக்கும் ஒன்றை நான் காணவில்லை”

குறிப்பு: எளிய மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நபரான சஞ்சயனைப் பற்றிய குறிப்பை இங்கே தருகிறேன். என்னால் முடிந்தவரை சுருக்கமாக வழங்க முயற்சித்தேன்.

மன்னன் திராதராஷ்டிரன் பார்வையற்றவராக இருந்ததால், அவரால் போர்க்களத்தில் போர் செய்ய முடியவில்லை. சஞ்சயன், திராதராஷ்டிர மன்னனின் தேரோட்டி. திராதராஷ்டிரன் போர்க்களத்தில் நடப்பதை தெரிந்து கொள்ள கவலையுற்றார்.

வியாச முனிவரால் சஞ்சயனுக்கு ஒரு தெய்வீக பார்க்கும் திறன் வழங்கப்பட்டது. நவீன உலகில், உலகக் கோப்பை போட்டியை நாம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்ப்பது போல, வியாசர் கொடுத்த வரத்தின் மூலம் குருக்ஷேத்திரப் போரை சஞ்சயன் தன் மனதின் மூலம் நேரலையில் பார்க்க முடிந்தது. மன்னன் திராதராஷ்டிரரிடம் விவரிக்க முடிந்தது. 

மகாபாரதத்தின் படி, முழு பகவத் கீதையும் சஞ்சயன், அரசன் திருதராஷ்டிரனுக்கு நிகழ்வுகளை நேரலையில் (LIVE) பார்க்கும்போது விவரிக்கிறார்.

அர்ஜுனனைத் தவிர கிருஷ்ணரின் உபதேசங்களை நேரிடையாகக் கேட்டவர் சஞ்சயன் ஒருவனே என்பதால் அவர் ஒரு புண்ணிய ஆத்மா! மகாபாரதத்தின் படி, முழு பகவத் கீதையும் சஞ்சயன், அரசன் திருதராஷ்டிரனுக்கு நிகழ்வுகளை நேரலையில் (LIVE) பார்க்கும்போது விவரிக்கிறார்.

குருக்ஷேத்திரத்தில் நடப்பதனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் பின்வருமாறு கூறுகிறார்:

போரில் எதிரிகளை தவிக்க செய்பவனும், உறக்கத்தை வென்றவனுமான அர்ஜுனன், புலன்கள், மனம் அனைத்தையும் அடக்கி ஆள்பவனாகிய கிருஷ்ணரிடம் அவனுடைய துயரம், குழப்பம் அனைத்தையும் கூறிவிட்டான். பேசி முடித்த அர்ஜுனன், கிருஷ்ணரிடம், “நான் போர் புரிய  மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்.

விளக்கம்: அர்ஜுனன் கிருஷ்ணரின் வழிகாட்டுதலை நாடினாலும், இந்த நேரத்தில் அவனது துயரமும், குழப்பமும் நிரம்பிய மனம் அவனைக் கட்டுப்படுத்தி, “நான் போரிட மாட்டேன்” என்று கிருஷ்ணரிடம் கூறுகிறது.  

இறுதியில் யுத்தம் நடந்தது, அர்ஜுனன் போர்க்களத்தில் போரிட்டார், பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கிருஷ்ணர் அர்ஜுனனை எப்படி சமாதானப்படுத்தினார்?

சஞ்சயர் கூறினார், “பரத மன்னன் வம்சத்தில் தோன்றிய திருதராஷ்டிரரே!  பாண்டவர் படைக்கும் கௌரவர் படைக்கும் மத்தியில் பல்வேறு உணர்ச்சிகளால் உந்தப்பட்டு மனம் விட்டுப் போய் நின்ற அர்ஜுனனைப் பார்த்து, கிருஷ்ணர் புன்முறுவலுடன் இந்த வார்த்தைகளைப் பேசினார்”

விளக்கம்: சஞ்சயர் இங்கு பரத மன்னன் வம்சத்தைக் குறிப்பிடுகிறார். ஏனென்றால் போர்க்களத்தில் இரு தரப்பும் பரத வம்சத்தின் வாரிசுகள் –  ஒரே பரம்பரை, ஒரே ரத்தம். ஆனாலும் ஒருவரையொருவர் கொல்லத் தயாராக நிற்கிறார்கள்.

கிருஷ்ணர் ஒரு இனிமையான, வசீகரமான புன்னகையை அளிக்கிறார். இது அர்ஜுனனின் அதீத சிக்கலான நிலைக்கு ஒரு எளிய தீர்வு கிருஷ்ணரிடம் இருப்பதை மறைமுகமாகக் குறிக்கிறது.

கிருஷ்ணர் சொல்கிறார், “அர்ஜுனா! நீ துக்கப்படத் தேவை இல்லாதவர்களை குறித்து துக்கப்படுகிறாய். அதே சமயத்தில், அறிவாளி போல பேசுகிறாய். அறிவாளிகள் இறந்தவர்களைப் பற்றியோ, உயிருடன் இருப்பவர்களைப் பற்றியோ கவலைப்படுவது இல்லை”

கிருஷ்ணர் சொல்கிறார்,

“நான் ஒருபோதும் இல்லாமல் இருந்ததில்லை.

நீயும் அவ்வாறே இல்லாமல் இருந்ததில்லை.

இந்த போர்க்களத்தில் உள்ள அரசர்களும் இல்லாமல் இருந்ததில்லை.

இனிமேலும் நாம் ஒருபோதும் அழியப் போவதும் இல்லை.”

விளக்கம்: கிருஷ்ணர் இங்கே தலைப்புச் செய்தியைத் தருகிறார். அடுத்தடுத்த வசனங்களில் விரிவாகப் பேசுகிறார். 

கிருஷ்ணர் தொடர்கிறார், “இந்த உடல் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என்று நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் தேகத்தின் உள்ளே உறைந்து கொண்டிருக்கும் “அது” அப்படியே இருக்கிறது. குழந்தைப் பருவம் இல்லாமல் போனாலும் “அது” இருக்கிறது. 

இளமை இல்லாமல் போனாலும் “அது” இருக்கிறது. அது போலவே, இந்த உடல் இல்லாமல் போனாலும் “அது” இருந்து கொண்டே இருக்கும். நிலையான மனத்தை உடையவன் இந்த நிலை மாறுதலைப் பற்றி குழப்பம் கொள்வது இல்லை.”

விளக்கம்: தேகத்தில் உறையும் “அது” அழிவற்றது என்று கிருஷ்ணர் இந்த சுலோஹத்தின் மூலமாக கூறுகிறார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “அர்ஜுனா! புலன்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் போது, அதாவது உயிருள்ள மற்றும் உயிரற்ற  பொருட்களைப் பார்ப்பது, கேட்பது, வாசனை கொள்வது, சுவைப்பது மற்றும் தொடுவது போன்றவை நடைபெறும். அந்த விஷயங்கள் மேல் நமக்கு விருப்பு அல்லது வெறுப்பு  உண்டாகி, இன்பத்தையும் துன்பத்தையும் விளைவிக்கிறது. நாம் உணரும் குளிர், வெப்பம் போலவே, இன்பமும், துன்பமும் தற்காலிகமானவை – தோன்றி மறைந்துவிடும். அவைகளைப் பொருட்படுத்தாதே!”

விளக்கம்: கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டாம். அவை மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறே இந்தப் புற உலகினால் ஏற்படும் இன்பமும் துன்பமும் மாறிக்கொண்டே இருக்கும் – தோன்றி மறையும். எனவே கிருஷ்ணர் நம்மை நமக்கு உள்ளே உறையும் “அதில்” கவனம் செலுத்த சொல்கிறார்.

இன்பத்தையும், துன்பத்தையும் பொருட்படுத்தாதே எனக் கூறிய கிருஷ்ணர் தொடர்கிறார், “அர்ஜுனா! இன்பத்திலும், துன்பத்திலும் கலக்கம் அடையாமல், சம நிலையில் திட சிந்தனை கொண்டவன், அழியா நிலையை அடைய தகுதி உடையவன் ஆகிறான்.”

கிருஷ்ணர் தொடர்கிறார், “இல்லாத பொருள் இருக்க வாய்ப்பில்லை. இருக்கும் பொருள் இல்லாமல் போகவும் வாய்ப்பில்லை. எது இருக்கிறது எது இல்லை என்பதன் உண்மையான அர்த்தம் ஆராய்ந்து, அதன் இறுதி முடிவை அறிந்தவர்கள் தீர்க்கதரிசிகள் ஆவார்கள்.”

விளக்கம்: எது மட்டும் இருக்கிறது என்று ஆராய்ந்து அறிய நம்மை தூண்டுகிறார் கிருஷ்ணர். சுலோகம் 13-இல், “அது” மட்டுமே அழிவற்றது என்று கிருஷ்ணர் கூறினார். சுலோகம் 14-இல், இந்த உலகில் இருக்கும் அனைத்தும் தற்காலிகமானவை என்று கூறினார். சுலோகம் 16-ல், “அது” மட்டுமே இருக்கும் பொருள்; “அது” தவிர மற்றவையாகிய அனைத்து பொருட்களும் (உடல் உட்பட) தோன்றி, மறையக் கூடிய இல்லாத பொருட்கள் என்று கூறுகிறார். 

நம் புலன்களால் உணர்ந்து நாம் எதை எல்லாம் இருக்கும் பொருளாகக் கருதுகிறோமோ, அதைத் தாண்டி இருக்கும் பொருளை பார்ப்பவரே தீர்க்கதரிசி. 

கிருஷ்ணர் தொடர்கிறார் “இங்கு இருக்கும் சர்வத்தையும் எது வியாபித்திருக்கிறதோ, “அது” அழியாதது என்பதை அறிந்து கொள். இந்த அழியாத பொருளை அழிக்கக் கூடிய அருகதை யாருக்கும் இல்லை; எதற்கும்  இல்லை; 

விளக்கம்:

சர்வத்தையும் வியாபித்திருக்கிறது – நாம் உணரக்கூடிய, பார்க்கக் கூடிய அனைத்தையும் ஊடுருவி வியாபித்திருக்கிறது

அருகதை இல்லை என்று ஏன் இந்த சுலோகம் சொல்கிறது – எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பதால் அதை அழிக்கக் கூடிய வல்லமை பொருந்தியவர் யாரும் இருக்க முடியாது; அழிக்கக் கூடிய ஆயுதம் எதுவும் இருக்க முடியாது.

கிருஷ்ணர் தொடர்கிறார், “இந்த உடலில் உறைந்திருக்கும் “அது”, நிரந்தரமானது (மாறாதது), அழிக்க முடியாதது,  வரையறுக்க முடியாதது. அதை உன்னால் எதுவும் செய்ய முடியாது (வசனம் 17). இந்த உடல் அழியக் கூடியது என்பதனால் அர்ஜுனா! போரிடுவாய்!“

இந்த சுலோகம் எளிமையானது போல் உள்ளது. ஆனால் இதற்கு ஆழமான அர்த்தம் உள்ளது. 

ஒரு பொருள் இல்லாததாக மாற, அது 3 வழிகளில் நிகழலாம்:

  1. நிரந்தரமற்ற தன்மை: மாற்றத்திற்கு உட்பட்டு (பால் தயிராக மாறும்போது, ​​பால் அங்கு இல்லாமல் போகிறது).
  2. அழியக்கூடியது: வடிவத்தை முழுமையாக அழிப்பதன் மூலம் (கிரேனைப் பயன்படுத்தி கட்டிடத்தை உடைக்கிறோம், கட்டிடம் அங்கு இல்லாமல் போகிறது).
  3. வரையறுக்கக்கூடியது: ஒரு பொருளின் வரையறுக்கப்பட்ட செயல்பாடு நின்று போகும் போது (பானையில் ஒரு சிறிய விரிசல் உள்ளது, அது தண்ணீரைத் தக்கவைக்க முடியாது; அதன் செயல்பாட்டை இழப்பதால் அது பானை என்ற தன்மையை இழக்கிறது.)

சுலோகம் கூறுகிறது, “அது” நிரந்தரமானது, அழியாதது, வரையறுக்க முடியாதது என மேலே உள்ள 3 வழிகளுக்கும் அப்பாற்பட்டு அழிவற்று இருக்கிறது.

கிருஷ்ணர் தொடர்கிறார், “எவனொருவன் “அதை” கொல்வதாக கருதுகிறானோ, அதே போல் யார் “அதை” கொல்லப்படுவதாக நினைக்கிறானோ அவர்கள் இருவரும் உண்மையை அறிந்திருக்கவில்லை. “அதை” கொல்வது என்பதும் இல்லை; “அது” கொல்லப்படுவது என்பதும் இல்லை. “

விளக்கம்: “அதை” கொல்வது என்ற செயல் இல்லை. “அது” கொல்லப்படுகிறது என்ற  விளைவும்  இல்லை என்று ஸ்லோகம் கூறுகிறது. இந்தச் செயலைச் செய்து அதன் விளைவை உண்டாக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவர்கள் உண்மையை அறியாதவர்கள்..

கிருஷ்ணர் தொடர்கிறார், “ “அது” எப்பொழுதுமே தோன்றுவதுமில்லை; மறைவதுமில்லை. ஒரு ஜீவனாக, பொருளாக, உருவமாக, வடிவமாக அதற்கு இருப்பு இருந்ததில்லை. இனியும் இருக்காது. “அது” பிறப்பதில்லை. சுயம்புவாக கூட தோன்றாதது. மாற்றங்களுக்கு உட்படுவதில்லை.  அழிவில்லாதது. முடிவில்லாதது. காலத்திற்கு அப்பாற்பட்டது. 

ஒரு உடல் தோன்றி, வாழ்ந்து, மறைவதற்கு ஆதாரமாக விளங்கும், ஆனால் அந்த உடலுடன் எந்த தொடர்பும் அற்ற, “அது” அழியாது. உடல் மட்டுமே அழியும்.

மிகவும் கடினமான சுலோகம். முடிந்த வரை விளக்க முயற்சித்து இருக்கிறேன். 

விளக்கம்:

தோன்றுவதுமில்லை – இல்லாத ஒன்று தான் பிறக்க முடியும் அல்லது தோன்ற முடியும். ஒரு உயிர் அல்லது பொருள் பிறக்கிறது/தோன்றுகிறது என்றால், அதற்கு முன்பு அந்த உயிர் அல்லது பொருள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். “அது” இல்லாமல் இருந்ததே இல்லை. எனவே “அது” ஒரு போதும் தோன்றுவது இல்லை. 

மறைவதுமில்லை – தோன்றும் ஒன்றுதான் மறைய முடியும். பிறப்பு இருந்தால் தான் இறப்பு இருக்கும். “அது” தோன்றுவதில்லை; அதனால் “அது” மறைவதில்லை.

ஜீவனாக, பொருளாக, உருவமாக இருப்பு இருந்ததில்லை – Electric wire-இல் current இருந்து கொண்டே இருக்கிறது. நாம் புது TV-யை plug-இல் connect செய்கிறோம். TV வேலை செய்யும். TV பழையது ஆனவுடன், பழுது போகிறது. நாம் அதை தூக்கி எறிந்து விடுவோம். TV தோன்றியது, வாழ்ந்தது, மறைந்தது. TV வேலை செய்ய ஆதாரமாக இருந்த current, TV என்ற பொருளாக உருவெடுத்ததா? இல்லை. அது போலவே, ஒரு உயிரின்/உயிரற்ற பொருளின் ஆதாரமாக விளங்கும் “அது” ஒரு பொருளாகவோ, ஜீவனாகவோ உருவெடுத்து இருந்ததில்லை. 

காலத்திற்கு அப்பாற்பட்டது – காலம் என்பது ஒரு பொருள் தோன்றி, மறையும் இடைவெளி. ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு 2 நாட்கள் வருகிறார் என்றால், அவர் வருவதில் இருந்து போவது வரை, அவர் தங்கிய காலம் என்கிறோம். ஒரு நபர் இறந்து விட்டால், அவர் தோன்றி, மறைந்ததின் இடைவெளியை அவர் வாழ்ந்த காலம் என்கிறோம். ஒரு மேடை நாடக நிகழ்ச்சியின் காலம் என்பது, நடிகர்கள் மேடையில் தோன்றி, இறுதியில் அவர்கள் விடைபெறும் வரை (மேடையில் மறைவது). தோன்றாத, மறையாத “அது” காலத்தைக் கடந்தது.

அண்டம் முதல் காற்றுக் குமிழ்கள் வரை அனைத்துப் பொருட்களும் (உயிருள்ளவை/உயிரற்றவை) 3 செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் – பிறப்பு/தோற்றம், வாழ்வாதாரம் மற்றும் இறப்பு/அழிவு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பங்கு “அது” க்கு பொருந்தாது/ஏற்காது. இந்த 3 செயல்பாடுகளும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த 3 செயல்பாடுகளால் “அது” பாதிக்கப்படாததால் நேரக் கருத்து பொருந்தாது. “அது” என்பது நேர வரையறைக்கு அப்பாற்பட்டது.

கிருஷ்ணர் தொடர்கிறார், “அர்ஜுனா! எவனொருவன் ”அதை” அழிவற்றது, மாறாதது, தோன்றாதது, காலத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்து கொண்டானோ, அவன் எப்படி, யாரை கொல்வான்? யாரால் கொல்லப்படுவான்? “

கிருஷ்ணர் ஸ்லோகம் 19 மற்றும் 20-ஐ ஸ்லோகம் 21 ஆக ஒருங்கிணைத்து, “அது” அழியாதது, மாறாதது, பிறக்காதது மற்றும் காலத்துக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்துகிறார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “பழைய நைந்து போன உடைகள் விடுவிக்கப்பட்டு, வேறு புதிய உடைகள் மனிதனை சேர்ந்து கொள்வது போலவே, இந்த பழைய தேய்ந்து போன உடல்கள் விடுவிக்கப்பட்டு, வேறு புது உடல்கள் “அதனுடன்”, சேர்ந்து கொள்கின்றன.”

விளக்கம்:

ஒரு அலமாரியின் பொருளாக இருக்கும் ஆடை ஒரு நபரின் உடலை சேரும் போது, அதற்கு உயிர், மதிப்பு, பொருள் மற்றும் செயல்பாடு ஆகியவற்றைப் பெறுகிறது. அது நைந்து போனால், ஆடை குப்பை ஆகிவிடுகிறது.. அதே போல, உடல் “அது” உடன் இணைந்தால், உடலுக்கு உயிர் கிடைக்கிறது.  உடல் தேய்ந்து போனால் “அதிலிருந்து”  விடுவிக்கப்பட்டு அழிந்து விடுகிறது. ஒரு மனிதனை எத்தனைப் புதிய ஆடைகள் வேண்டுமானாலும் வந்து சேரலாம். அதே போல, 

எத்தனைப் புதிய உடல்கள் வேண்டுமானாலும் “அதை” வந்து சேரலாம்.

சில சிந்தனைகள்:

சீரியல் லைட் பல்ப் செட்டில், வயரில் (wire) மின்னோட்டம் (current) இருக்கும். பல்புகள் fuse போது அகற்றப்படும். அதிக வெளிச்சம் தேவைப்பட்டால் பல்புகள் சேர்க்கப்படுகின்றன. அதே போல், “அது” ஒரு வயரில் மின்னோட்டம் (current in the wire) போல உள்ளது. புதிய உடல்கள் “அதில்” இணைக்கப்பட்டு உயிர் பெறுகின்றன. தேய்ந்து போன உடல்கள் அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றன.

தர்க்கரீதியான கண்ணோட்டத்தில் ஒரு சிந்தனை. “அது” ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு தாவுவதில்லை.  1980 இல், உலக மக்கள் தொகை சுமார் 4.4 பில்லியனாக இருந்தது. 2024 இல், இது தோராயமாக 8.1 பில்லியன் ஆகும். “அது” ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு குதித்தால், மக்கள் தொகை அப்படியே இருந்திருக்க வேண்டும்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “ “அதை” ஆயுதங்களால் வெட்டி சிதைக்க முடியாது; நெருப்பால் எரித்து இல்லாமல் ஆக்க முடியாது; நீரால் கரைத்து  அழிக்க முடியாது; காற்றால் ஆவியாக்கி இல்லாமல் ஆக்க முடியாது.”

விளக்கம்: 

இந்த ஸ்லோகம் உடலின் நிலையற்ற தன்மைக்கு மாறாக நிலைத்து நிற்கும் “அதன்” நிரந்தர தன்மையை அழகாக கூறுகிறது. ஆயுதங்களைப் பயன்படுத்தி தீங்கு விளைவிப்பதன் மூலமோ, நெருப்பால் எரிக்கப்படுவதன் மூலமோ, தண்ணீரில் கரைந்தோ அல்லது காற்றில் ஆவியாகி விடுவதன் மூலமோ “அதை” இல்லாமல் செய்ய முடியாது.

பஞ்ச பூதத்தில் உள்ள 4 பூதங்களால் ஏற்படும் அழிவுகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள்  “அதை” அழிக்காது என்பது பற்றி ஸ்லோகம் கூறுகிறது.

நிலம் – நிலத்திலிருந்து வரும் தாதுக்களைப் பயன்படுத்தி ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு மரக் கட்டையால் கூட ஒரு நபர் காயப்படுத்தப்படலாம். மரங்கள் நிலத்தின் ஒரு பகுதி.

நீர் – சர்க்கரை, உப்பு போன்ற பொருட்கள் தண்ணீரில் கரைந்து மறைந்துவிடும்.

காற்று – கற்பூரம், பெட்ரோல் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி, இல்லாததாகி விடும்.

நெருப்பு – எல்லா பொருட்களையும் (உயிருள்ள/உயிரற்ற பொருட்கள்) எரித்து நெருப்பு அழிக்கும்.

இந்த 4 பூதங்கள் எதனாலும் “அதை” இல்லாததாக ஆக்க முடியாது. 5வது அங்கமான ஆகாஷம் மற்ற கூறுகள் போல் பொருட்களை நேரடியாக அழிப்பதில்லை.

கிருஷ்ணர் தொடர்கிறார்,

  1. “அதை” எதனாலும் வெட்டி சிதைக்க முடியாது; எதனாலும் எரித்து இல்லாமல் ஆக்க முடியாது; எதனாலும் கரைத்து  அழிக்க முடியாது; எதனாலும் ஆவியாக்கி இல்லாமல் ஆக்க முடியாது. 
  2. “அது” மாறாதது, எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கிறது. நிலையானது. அசையாதது, சதா சர்வ காலமும் இருக்கும் ஒன்று”

விளக்கம்: முதல் பார்வையில், இந்த சுலோகம், 23-வது சுலோகத்தைப் போல் இருப்பது போல உள்ளது. ஆனால் இதன் ஆழம் அதிகம்.

பகுதி – 1

23-வது சுலோகத்தில், பஞ்ச பூதங்களில் நான்கும் “அதை” இல்லாமல் செய்ய முடியாது என்று கூறிய கிருஷ்ணர், இங்கு  “எதுவுமே”  – “அதை” இல்லாமல் செய்ய முடியாது என்கிறார். அவர் ஒரு தீர்க்கதரிசி. பஞ்ச பூதங்களைத் தாண்டி, புது வித ஆயுதங்களையும், அழிக்கும் சக்திகளையும் இந்த மனித இனம் கண்டுபிடிக்கும் என்று அன்றே அறிந்திருக்கிறார்.

Acid, Chemical compounds, chemical weapons, Biological weapons, Radiation (atomic bomb), Electrocution, Missile, Laser gun – எந்த புது கண்டுபிடிப்பும் “அதை” அழிக்காது.

பகுதி – 2

“அது” பஞ்சபூதங்களால் அழிக்க முடியாது என்பதால், ஏன் “அது” பஞ்சபூதங்களில் ஒன்றாக இருக்க கூடாது என்ற கேள்வி நமக்கு வரலாம்.இந்த சுலோகத்தில் இரண்டாவது பாகத்தின் மூலம், “அது” பஞ்சபூதங்களில் ஒன்றல்ல என்பதை நமக்கு உறுதி செய்கிறார்.

*மாறாதது – நிலம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் “அது” மாறாதது. எனவே “அது” நிலமும் அல்ல.

*எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கிறது.- ஆகாஷம் (space) எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கிறது. ஒரு பொருள் ஒரு இடத்தை அடைத்தவுடன் அங்கு ஆகாஷம் இல்லாமல் போகிறது. ஆனால் “அது” எங்கும் எப்போதும் வியாபித்து இருக்கிறது. எனவே “அது” ஆகாஷமும் அல்ல.

*நிலையானது. – நீரால் ஒரு நிலையில் இருக்கவே முடியாது. ஆனால் “அது” நிலையானது. எனவே “அது” நீரும் அல்ல.

*அசையாதது –  காற்று அசைந்து கொண்டே இருக்கும். ஆனால் “அது” அசையாதது. எனவே “அது” காற்றும் அல்ல.

*சதா சர்வ காலமும் இருக்கும் ஒன்று – நெருப்பு நொடியில் தோன்றி மறையும். (flicker).  ஆனால் “அது” சதா சர்வ காலமும் இருக்கிறது. எனவே “அது” நெருப்பும் அல்ல.

கிருஷ்ணர் தொடர்கிறார், “  “அது”  ஐந்து புலன்களாலும் அறிய முடியாதது; சிந்தையாலும் அனுமானம் செய்ய முடியாதது; புலன்களால் அறிய முடியாததால் இயற்கைக்கு மாறான ஒன்றும் இல்லை; “அதை” அறிந்த ஒருவன் துக்கப்படுதல் என்பது தேவை இல்லாதது.”  

விளக்கம்:

*புலன்களால் அறிய முடியாதது: நாம் பொருட்களை 5 புலன்கள் மூலம் மட்டுமே உணர்கிறோம் – பார்த்தல், சுவைத்தல், கேட்டல், மணம், தொடுதல்/உணர்தல். இந்த 5 புலன்கள் மூலம் நாம் “அதை” புரிந்து கொள்ள முடியாது.

*சிந்தையால் அனுமானம் செய்ய முடியாதது: சில நேரங்களில், புலன்களால் நம்மால் உணர முடியாத போது ஏற்கனவே கற்ற தகவல்களை இணைப்பதன் மூலம் விஷயங்களை நாம் கற்பனை செய்யலாம்/ஊகிக்கலாம். எடுத்துக்காட்டாக, மற்றவர்கள் அனுபவிக்கும் ஒரு வலி/துக்கத்தை நாம் அதே வலியை அனுபவிக்கவில்லை என்றாலும் அவர்கள் முக பாவனை மூலம் நாம் அனுமானிக்கலாம்/கற்பனை செய்யலாம். ஆனால்  நமது அறிவுத்திறன் மூலம் “அதை” கற்பனை செய்ய முடியாது.

*இயற்கைக்கு மாறானது இல்லை: புலன்களால் அல்லது அறிவார்ந்த கற்பனையால் நாம் அதை உணர முடியாது என்பதால், இது பேய் போன்ற இயற்கைக்கு மாறான ஒன்று அல்ல.

கிருஷ்ணர் தொடர்கிறார், “பிறப்பும் இறப்பும் மாறாதது என்று நீ நினைத்தாய் என்றாலும், வீரனே! அப்போதும் நீ கவலைப்படத் தேவையில்லை”

விளக்கம்: 

அர்ஜுனன் போரில் இறக்கப் போகிறவர்களை குறித்து வருத்தப்படுகிறார்.  பிறப்பற்ற மற்றும் அழிவில்லாத “அது” என்ற கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளாமல், இறப்பு என்ற ஒன்றுக்காக அவர் இன்னமும் கவலைப்பட்டால், அதற்கான மறுமொழியே (பதில்) இந்த சுலோகம். 

ஏதோ ஒன்று பிறந்து அழியக்கூடியது என்று அர்ஜுனன் கருதுகிறார். அந்த விஷயத்திலும், அவர் கவலைப்படத் தேவையில்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆழ்ந்த விளக்கம் அடுத்த வரும் ஸ்லோகங்களில் உள்ளது.

கிருஷ்ணர் தொடர்கிறார் “தோன்றுபவை எல்லாம் மறையும். மறைபவை எல்லாம் தோன்றும்.  இதை நிவர்த்தி செய்யவே முடியாது. இதன் பொருட்டு நீ கவலைப்படுவது அர்த்தமில்லாதது.” 

விளக்கம்:

பழத்தில் தோன்றும் (தோற்றம்) விதை அழிந்து (மறைவு), செடி ஆகி, பழத்தில் மீண்டும் விதை ஆகிறது (தோற்றம்).  தோற்றம், மறைவு, தோற்றம் என்பது ஒரு சுழற்சி. இது இயற்கை நியதி. இதை மாற்ற முடியாது.

கிருஷ்ணர் தொடர்கிறார் “படைக்கப்பட்ட அனைத்தும் (உயிருள்ள, உயிரற்ற பொருட்கள்), முதலில் தோன்றாமல் இருந்து, இடையில் தோன்றி, முடிவில் தோன்றாமையாக இருக்கின்றன. அர்ஜுனா! இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?”

விளக்கம்: 

தோற்றம் → மறைவு → தோற்றம் என்பது ஒரு சுழற்சி.  இந்த சுழற்சியில், விஷயங்கள் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுகின்றன.  பால் இறப்பதால் , தயிர் பிறக்கிறது. தயிரின் மரணத்தால், வெண்ணெய் பிறக்கிறது. வெண்ணெய் இறப்பதால் நெய் பிறக்கிறது. பொருளின் ஒரு வடிவம் மறைவதால், பொருளின் மற்றொரு வடிவம் தோன்றுகிறது. அறிவியல் கூறும் ஆற்றல் அழிவின்மை விதி இதுவே. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றலாம்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “இதனை” (வசனம் 16 முதல் வசனம் 28 வரை போதிக்கப்பட்டவைகளை) பகுத்தறிந்து ஆராயும் ஒருவன், அதிர்ச்சியுடன் வியக்கிறான். “இதனை” விவாதிக்கும்  ஒருவன் பிரமிப்புடனும், பாராட்டுடனும் பேசுகிறான். “இதனை” கேட்கும் ஒருவன், ஆச்சரியப்பட்டு ஈர்க்கப்படுகிறான். ஆனால் யாரும் இந்த போதனைகளின் ஆழ்ந்த அர்த்தத்தை  அறிந்து கொள்வதும் இல்லை; நடைமுறைப்படுத்த முயற்சிப்பதும் இல்லை.”

விளக்கம்:

இங்கே “இதனை” என்பது வசனம் 16 முதல் வசனம் 28 வரை போதிக்கப்பட்டவைகளை குறிக்கிறது. கற்றல் என்பது 3 வழிகளில் நடக்கிறது. முதல் வழி, சுற்றுப்புறத்தை கவனித்து, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்பதன் மூலம். இரண்டாவது வழி விவாதங்களில் பங்கேற்பதன் மூலம். மூன்றாவது வழி ஒருவரின் போதனைகளைக் கேட்பதன் மூலம்.  இந்த போதனைகளை மக்கள் பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் கற்றுக் கொண்டாலும், அதன் ஆழத்தை யாரும் உணரவில்லை.

(இதுவரை கூறியது சுருக்கம் மட்டுமே. இதை விரிவாகவும், ஆழமாகவும் கற்க வேண்டியதை வசனம்-29ல் உணர்த்தி  இருந்தாலும், இதுவரை சுருக்கமாக கூறியதின் அடிப்படையில் மீண்டும் கிருஷ்ணர் தொடர்கிறார்.)

கிருஷ்ணர் தொடர்கிறார், “அர்ஜுனா! இல்லாமல் இருந்து, தோன்றி, மீண்டும் இல்லாமல் போகும் சுழற்சிக்கு உட்பட்டு,   மாறிக்கொண்டே இருக்கும் இந்த உடலில், உறைந்திருக்கும் “அது” மாற்றங்களுக்கு உட்படாமல், அனைத்தின் அடிப்படை ஆதாரமாக இருப்பதால்,  எதையுமே அழிக்க இயலாது.

உயிருள்ள மற்றும் உயிரற்ற எந்த ஒரு பொருளின் அழிவை நினைத்தும் நீ துக்கப்படுவது தேவையற்றது.

விளக்கம்:

“அது” அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் ஆதாரமாக இருப்பதால் தான்,  பொருட்கள் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுமே தவிர, அவற்றை ஒருபோதும் அழிக்க முடியாது. 

சுலோகம் 31 இல் நுழைவதற்கு முன், நமக்கு சில கேள்விகள் இருக்கலாம் .

கிருஷ்ணர் சொல்கிறார், “எதையும் அழிக்க முடியாது. போரிடு.” 

நமக்குத் தோன்றலாம், “எதையும் அழிக்க முடியாது என்றால், அர்ஜுனன் ஏன் சண்டையிட்டுக் கொல்ல வேண்டும்?”  

மக்கள் கேட்கலாம், “கிருஷ்ணர் கொலையை ஊக்குவிக்கிறாரா?”

விடை இந்த சுலோகத்தில் உள்ளது. 

கிருஷ்ணர் தொடர்கிறார், “பிரத்யேகக் கடமையில் தயக்கத்திற்கு இடமே இல்லை. அநீதிக்கு எதிரான யுத்தத்தில் போரிடுவதை விட சிறந்தது  ஒரு ராணுவ வீரனுக்கு எதுவும் இல்லை.”

விளக்கம்:

ஒரு செயலைப் பற்றி முடிவெடுப்பது ஒரு நபரின் பிரத்யேகக் கடமையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கிருஷ்ணா வலியுறுத்துகிறார்; அது ஒரு நபரின் வேலை, பதவி, இடம் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும்.

உதாரணமாக, 

ஒருவர் ராணுவ வீரனாக நாட்டின் ​​எல்லையில் இருக்கும் போது, எதிரியைக் கொல்வது அவர் கடமை. அதே வீரர் சொந்த ஊருக்கு வரும் போது, அந்த இடத்தில் மக்களை கொல்வது கடமை ஆகாது. 

அது போலவே, ஒரு மருத்துவரின் கடமை, ராணுவ வீரரின் கடமையில் இருந்து வேறுபட்டது. போர் முனையாகவே இருந்தால் கூட, அங்கே மருத்துவ முகாமில் இருக்கும் ஒரு மருத்துவர், காயமடைந்த எதிரியை காப்பாற்றுவதே அவர் கடமை.

கடமையைப் பற்றி கிருஷ்ணர் தொடர்கிறார்.

கிருஷ்ணர் கூறுகிறார், “அர்ஜுனா! தற்செயலாக வாய்த்த, சுவர்க்கத்தின் வாசல் திறப்பது போன்ற, இந்த அரிய போர் வாய்ப்பைப்  பெறுவதற்கு ஒரு ராணுவ வீரனாக நீ மகிழ்ச்சி அடைய வேண்டும்; துக்கப்பட கூடாது.”

விளக்கம்:

ஆக கொல்லுபவர்களோ, கொல்லப்படுபவர்களோ, அல்லது தண்டிக்கப்படுபவர்களோ நம் உறவினர்களா அல்லது நண்பர்களா என்பது முக்கியம் இல்லை. கடமை மட்டுமே முக்கியம் என்று கிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.

கிருஷ்ணர் கூறுகிறார்,  “ஆனால் ஒரு ராணுவ வீரனாக உன் பிரத்யேகக் கடமையை முன்னிட்டு, நியாயத்துக்காக போரிடாமல் இருப்பாய் என்றால், சேர்த்துவைத்த புகழை இழப்பது மட்டுமல்லாமல், தீவினைகளுக்கும் பொறுப்பாவாய்”

விளக்கம்:பிரத்யேகக் கடமையை செய்யத் தவறினால், நல்லதை இழந்து, கெட்டதும் வந்து சேர்ந்து இரு வகையிலும் இழப்பு ஏற்படும் என்று இந்த சுலோகம் கூறுகிறது. இது அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல. நமக்கும் தான். எடுத்துக்காட்டாக, ஒரு தாயாய் அல்லது தந்தையாய் வீட்டில் நம் கடமையை செய்யத் தவறினால், குழந்தைகள் தவறான வழியில் சென்று, குழந்தைகளின் நல்ல எதிர்காலத்தை இழப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் அவப்பெயரும் வந்து சேரும்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “மேலும் மக்கள் உன்னுடைய அவப்பெயரைக் காலம் காலமாக பேசுவார்கள். அப்படிப்பட்ட அவப்பெயர், மரியாதையான மனிதனுக்கு மரணத்தைக் காட்டிலும் கொடியது.”

கிருஷ்ணர் இந்த சுலோகத்தில் தொடர்கிறார், “உன்னைப் போற்றிப் பெருமையாக நினைக்கும்  தேர்களின்  தளபதிகள், போர்க்களத்தில் இருந்து நீ ஒரு முன்னோடியாக திகழ முடியாததால் விலகியதாக நினைப்பார்கள். அதனால் உன்னை ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்.” 

விளக்கம்:

முன்னோடிகள் மற்றும் தலைவர்கள் போன்ற உயர்மட்ட நபர்கள் கொள்கைகளை உருவாக்குகிறார்கள் அல்லது அவர்கள் இருக்கும் கொள்கைகளைப் பராமரிக்கிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளை அவர்களே பின்பற்றாதபோது, ​​கொள்கையே அதன் மதிப்பை இழந்து விடும்.

குறிப்பிட்ட கடமைகளை கடைபிடிப்பது அனைவருக்கும் முக்கியம் ஆனால் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளுக்கு இது மிகவும் முக்கியமானது என்று கிருஷ்ணா வலியுறுத்துகிறார்

முந்தைய சுலோகங்களில் கடமை தவறுவதன் விளைவுகளை கிருஷ்ணர் கூறுகிறார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “மேலும் உனக்கு வேண்டாதவர்கள், கொள்கை தவறியதற்காக உன்னை தரக்குறைவான வார்த்தைகளால் பரிகாசம் (கேலி) செய்து பேசுவார்கள். அதை விட வேதனைத் தருவது வேறு என்ன இருக்க முடியும்?”

விளக்கம்:

முந்தைய ஸ்லோகத்தில், கிருஷ்ணர் கூறுகிறார் அர்ஜுனனின் அபிமானிகள், அர்ஜுனன் சரியான காரணத்திற்காக போராடினாலும், கொள்கைக்காக அவன் நிற்கவில்லை என்றும், அதனால் வெளியேறினான் என்றும் கருதுவார்கள். அதனால் அவர்கள் கொள்கையில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

இந்த ஸ்லோகத்தில், கிருஷ்ணர் கூறுகிறார் அர்ஜுனனின் அபிமானி அல்லாதவர்கள்,  அர்ஜுனனன் தனது கொள்கையே தவறானது என்று நினைத்து போரில் இருந்து விலகினான் என்று கேலி செய்வார்கள். அது துரியோதனனின் கொள்கையே சரியானது என்பதை குறிப்பதாகும்.

போராடும் காரணத்தை தீர்மானிப்பதில் தவறு செய்ததற்காக கேலி செய்யப்படுவது மிகவும் வேதனைக்குரியது.

இதுவரை கிருஷ்ணர் கடமையின் முக்கியத்துவத்தை கூறினார். கடமை தவறுவதால் ஏற்படக்கூடிய கெடுதல்களை கூறினார். கடமை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்கிற கேள்விக்கு இந்த சுலோகத்தில் விடை சொல்கிறார்.   

கிருஷ்ணர் தொடர்கிறார், “போரில் மரணம் அடைந்தால் (வேதங்களில் சொல்லிய பிரகாரம்) சொர்க்கம் முதலியவைகளை அடைவாய். அப்படி இல்லாமல், ஜெயித்தால் இந்த உலகை ஆள்வாய். ஆகவே, எந்த சலனமும் இல்லாமல் உறுதியோடு எழுந்து போரிடு. “

விளக்கம்:

இந்த சுலோகம் மிகவும் முக்கியமானது, அர்ஜுனன் போரிடுவதற்கு கிருஷ்ணர் இந்த ஊக்கமூட்டும் ஆதாயங்களை பரிந்துரைக்கவில்லை அல்லது சொல்லவில்லை. கடமையை செய்வதால் நிச்சயமாக உலக வழக்கப்படி ஏதோ ஒரு பலன் உண்டு. இந்த பலனை எதிர்பார்த்து தான் எல்லோரும் எந்த ஒரு கடமையையும் அல்லது செயலையும் செய்கிறோம். பலனை எதிர்பார்த்து செய்யும் போது, அதனால் வரும் விளைவுகளையும், அதைத் தாண்டி உள்ள மேலான நிலையையும் பின்வரும் சுலோகங்களில் கிருஷ்ணர் சொல்கிறார்.

முந்தைய சுலோகம், கடமையை செய்யும் போது, உலக வழக்கப்படி ஒரு பலன் (வெற்றி அல்லது தோல்வி) உண்டாகவே செய்யும்.  பலன் கருதி செய்தால், விளைவுகளுக்கு நீ பொறுப்பு என்று கூறுகிறது.

கிருஷ்ணர் தொடர்கிறார், “இன்ப, துன்பம் இரண்டுமே இல்லை என்று சொன்னது போல் (சுலோகம் 2.14) லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகள் ஒன்று என கருதி, நீ போரில் ஈடுபட்டால்,  அதனால் விளையும் தீவினைகளுக்கு பொறுப்பாக மாட்டாய்.”

விளக்கம்:

இந்த போதனைகளின் ஆரம்பத்தில், சுலோகம் 2.14, 2.15-இல் கிருஷ்ணர் சுக, துக்கம் புலன்களின் கூடுதலால் ஏற்படுகிறது, அது நிலையற்றது ஆகவே அதை பொருட்படுத்தாமல் போரிடு என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக இந்த சுலோகத்தில் வெற்றி, தோல்வியையும், அதன் விளைவாக ஏற்படும் லாப நஷ்டத்தையும் பொருட்படுத்த வேண்டியதில்லை; அவைகளுக்கு இருப்பும் இல்லை; அவைகள் வேறுபட்டதும் அல்ல என்று சொல்கிறார்.

சுவர்க்கம், பூமி போன்ற லாபங்களை கருதி போர் செய்தால், அர்ஜுனன் ஆரம்ப கட்டத்தில் வருந்திய விளைவுகளுக்கு ( அத்தியாயம் 1, சுலோகம் 2.1 – 2.8 ) அவன் பொறுப்பாவான். பலன்களை ஒரு பொருட்டாக கருதாமல் செயல் செய்தால், விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல. 

சுக துக்க, லாப நஷ்ட, வெற்றி தோல்வி இவற்றில் நடு நிலை என்று சுருங்க இங்கு கூறப்பட்டாலும் நாம் அவைகளின் ஆழத்தை ஆராய வேண்டும்.

எப்படி இவைகள் அர்த்தமற்றவை, எப்படி இவைகளுக்கு இருப்பு இல்லை, எப்படி இரண்டும் ஒன்று, எப்படி இரண்டும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது அல்ல. இது போல் பல விஷயங்கள் சுருங்க கூறப்படும் அவைகளை எல்லாம் பிற்பாடு ஆழமான தனிப்பட்ட சிந்தனை தேவை.

கிருஷ்ணர் தொடர்கிறார், “இதுவரை ஞானத்தைப் பற்றிய அறிவை (புத்தி) உனக்கு எடுத்துரைத்தேன். இதன் மூலம் கற்றுக்கொண்ட புத்தியை காரியத்தில் பிரயோகப்படுத்துவதால்,  செயலுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாமல் போகும்.”

விளக்கம்:

முந்தைய சுலோகத்தில், காரியத்தின் விளைவுகளால் பாதிக்கப்படமாட்டாய் என்று சொன்ன கிருஷ்ணர், இந்த சுலோகத்தில் காரியத்துக்கே சம்பந்தப்பட மாட்டாய் என்று சொல்கிறார். இங்கு முன்னுரை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று இனி வரும் சுலோகங்களில் விளக்குவார். 

இங்கு ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் ஒரு ஐந்து வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொண்டிருந்த ஒருவனை பார்த்தவர், அவனை (குற்றம் செய்தவனை) அடித்துக் கொன்றார். கொலையே செய்து இருந்தாலும், அந்த செயலுக்கும் (கொலைக்கும்) அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கருதியதால், குற்றத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார் நீதிபதி.

முந்தைய சுலோகத்தில், “ஞானத்தைப் பற்றிய அறிவை (புத்தியை) காரியத்தில் பிரயோகப்படுத்துவதால்,  செயலுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாமல் போகும்” என்றார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “இதில் எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் வீணாகப் போவது இல்லை. மேலும் (பலன் கிடைப்பதில்) எந்த விதமான தடைகளோ அல்லது ஏமாற்றமோ ஏற்படாது. இந்த ஆன்மீக பாதையில் ஒரு சிறு துளி அளவு முயற்சியும் கூட பேராபத்துகளில் இருந்து பாதுகாக்கும்.”

விளக்கம்:

மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மாறும் போது, ஆசிரியர் எச்சரிப்பார் “​​முந்தைய வகுப்புகளைப் போல இது எளிதானது அல்ல; ஆனால் நீங்கள் கடினமாக உழைத்து, முயற்சிகளை மேற்கொண்டால், நல்ல கல்லூரியில் சேர்க்கப்படுவீர்கள் மற்றும் உதவித்தொகையும் கிடைக்கும். “

அது போலவே இதுவரை ஆன்மீகத்தின் அடித்தளம் அமைத்துக் கொடுத்த கிருஷ்ணர், இனிமேல் விஸ்தாரமாக கூறப்போவதால் (transition) இந்த சுலோகத்தை இங்கே கொடுக்கிறார். கிருஷ்ணர், “அவை நடைமுறைக்கு ஒத்துவராதது மற்றும் பின்பற்றுவது கடினம் என  தோன்றினாலும், நம் முயற்சிகள் எதுவும் வீண் போகாது; பலன் நிச்சயம் இருக்கும்; தீய விளைவுகள் இருக்காது. எந்த ஏமாற்றமும் இருக்காது” என்று உறுதி அளிக்கிறார். பேராபத்து என்று அவர் கூறுவது இந்த உலகத்தால் நம் மனதில் உண்டாகும் கொந்தளிப்பு மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு.

ஆன்மீகம் நமக்கு நிலையான இன்பத்தை உறுதி செய்கிறது அதே நேரம் மற்ற ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு கவசமும் கூட. தைரியமாக அடிகளை எடுத்துவை. நாம் இறுதி உச்சியை அடைய முடியவில்லை என்றாலும் எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறோமோ அதுவரைக்கான பலன் நிச்சயம் உண்டு. தீய விளைவுகள் நிச்சயம் இருக்காது அதனால் எந்த ஏமாற்றமும் இருக்காது என்பதாக ஒரு உறுதி மொழியை கிருஷ்ணர் கொடுக்கிறார். 

சுலோகம் 39: “ஞானத்தைப் பற்றிய அறிவை (புத்தியை) காரியத்தில் பிரயோகப்படுத்துவதால்,  செயலுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாமல் போகும்” என்றார்.

சுலோகம் 40:  “இந்த பாதையில் எந்த முயற்சியும் வீணாகாது”

கிருஷ்ணர் தொடர்கிறார், “பகுத்தாய்ந்து நிரூபிக்கப்பட்ட, அறிவார்ந்த புத்தி சார்ந்த முறை இது ஒன்று  (வசனம் – 39 ல் சொல்லப்பட்ட வழி) தான். பகுத்தாய்வு செய்யாமல், நிச்சய முடிவுக்கு வர முடியாத போது, பல கிளைகளுடன் கூடிய எண்ணற்ற  முறைகளுக்கு அது வழிவகுக்கிறது.”

விளக்கம்:

கடவுளின் கட்டளை எனும் பொழுது, அதை நாம் நம்ப வேண்டும், அங்கே நம்பிக்கை என்று ஒன்று வருகிறது.  ஆனால் இங்கு நம்பிக்கையை பற்றி கிருஷ்ணர் சொல்லவில்லை. சரியானதை அலசி ஆராய்ந்து அறிந்து கொண்ட புத்தி சார்ந்த முறை என்கிறார். அதாவது பூமியின் வடிவம், முக்கோணவியல் மற்றும் அணுக் கோட்பாடு எப்படி ஆராய்ந்து முடிவுக்கு வரப்பட்டதோ, அது போன்றது இந்த முறை/வழி. பூமியின் வடிவம் இது தான் என்று முடிவுக்கு வரும் முன், பல விதமான கருத்துக்கள் உலகில் நடமாடின.

சுலோகம் 39 & 41: ஞானத்தை அறிந்த புத்தி ஒன்றே பகுத்தாய்ந்து நிரூபிக்கப்பட்ட வழிமுறை. அப்படி இல்லாத போது, அது பல கிளைகளுடன் கூடிய எண்ணற்ற  முறைகளுக்கு வழிவகுக்கிறது.

பல கிளைகள் – ஆன்மீகத்தில் உள்ள பல வழிமுறைகள்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “அப்படிப்பட்ட எல்லா தவறான வழிமுறைகளை (பல கிளைகள்) போதிப்பவர்களும், அழகான கவர்ச்சி வார்த்தைகளை கூறி பிரச்சாரம் செய்வார்கள். 

அந்த பல கிளைகளில் ஒரு பகுதியாக, சிலர் வேதத்தைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாமலும், சரியான புரிதலும் பகுத்தறிவும் இல்லாமலும், வேதத்தின் கவர்ச்சியான சில பகுதிகளில் அபிமானம் கொண்டு அதை மேற்கோள் காட்டி அதுவே வேத வாக்கு அதை தவிர வேறு இருக்க முடியாது என்று வாதிடுவார்கள்.”

விளக்கம்:

முதல் வரி தவறாகப் பிரசங்கம் செய்யும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். இரண்டாவது வரி நன்மை பயக்கும் என்று கருதி வேதத்தின் சில பகுதிகளைப் ஆணித்தரமாக நம்பி பின்பற்றுபவர்களைக்  குறிப்பிடும் கிளை.

கவர்ச்சியான வார்த்தைகள் – எங்கள் வழிமுறைகள் மூலம் பெரிய பலன் கிடைக்கும். (பலன்கள் பற்றி வசனம் 43-இல் விரிவாக சொல்கிறார்)

ஒருவன் நிலாவை சுட்டிக் காண்பிக்க விரும்பி ஆள்காட்டி விரலை நீட்டி அதோ தெரிகிறது பார் நிலா என்று சொன்னால், பார்ப்பவன் நிலாவை விட்டு விட்டு சுட்டு விரல் நுனியை பார்த்து அது தான் நிலா என்று நம்பி கொள்வது போல்,

திசை வழிகாட்டும் பலகை திருப்பதிக்கோ அல்லது திருத்தணிக்கோ வழி சொல்ல, நாம் பலகை இருக்கும் இடமே இது தான் திருப்பதி அல்லது திருத்தணி என்று அமர்வது போல,

ஞானத்துக்கு போகும் வழியை வேதம் காட்டுகிறது. ஆனால் வழி காட்டும் இடத்திலேயே அதாவது பலன்களை எதிர்பார்த்து செய்யக்கூடிய வேதத்தின் பகுதிகளிலேயே நாம் நின்று விடுகிறோம்.

முந்தைய சுலோகத்தில், வேதத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்தி, கவர்ச்சியான வார்த்தைகளால் சிலர் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறிய கிருஷ்ணர், எது அந்த வேதத்தின் பகுதிகள், எவை கவர்ச்சியான வார்த்தைகள் மற்றும் அதை எப்படி  பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்று விரிவாக சொல்கிறார்.

கிருஷ்ணன் தொடர்கிறார், “ஆசை வசப்பட்டவர்களிடம்,  சுவர்க்கத்தை அடைவது தான் பெரிய விஷயம் என்றும், அது இந்த பிறவியில் நாம் செய்யும் நற்காரியங்களின் பலனாக கிடைக்கும் என்றும்,  நற்காரியங்களை விஸ்தரிக்க ஏதுவாக,    வேதத்தில் சொல்லியுள்ள கிரியைகளை (சடங்குகள், யாகங்கள், விரதங்கள்) சிறப்பாக பெரிய அளவில் செய்தால், இந்த பிறவியிலும், சுவர்க்கத்திலும் எல்லா போகங்களையும், செல்வங்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைவோம் என்றும் கூறி அந்த வழிகளில் இழுப்பார்கள்.”

விளக்கம்: பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள், நம் ஆசைகளை மேலும் மேலும் தூண்டுவதாகவே இருக்கும், ஆசை என்பது தீ மாதிரி அதில் எதைப் போட்டாலும் அதன் தீவிரம் அதிகமாகுமே தவிர அது குறையாது. அதே போல் எந்த பொருள் சார்ந்த விஷயங்களும் நிலையான (24 X 7) ஆனந்தத்தையும் அமைதியையும் தராது. அதனால் தான் பெருத்த செல்வந்தர்களும் (billionaires and celebrities) பெரும் மனத்துயரத்தில் இருக்கிறார்கள்.

மேலும், அந்த காலத்தில் சுவர்க்கம் என்று சொன்னது – சொர்க்கத்தில் நாம் அனைத்து வகையான உணவுகள், நல்ல இசை, நாள் முழுவதும் விளையாட்டுகள், நல்ல படுக்கை மற்றும் வாசனை திரவியங்கள், ஆடம்பரமான வாகனங்கள் மற்றும் விரும்பும் எல்லாம் நம் அறைக்கு கொண்டு வரப்படும்.  ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் அனைத்தும் கிடைக்கும்.

இந்த கோவிட் (covid) பிறகான வாழ்க்கையில், சீன, ஜப்பானிய உணவு வகைகளில் இருந்து அனைத்து வகையான உணவுகளும் ஆர்டர் செய்வதன் மூலம் கிடைக்கிறது. மொபைலில் அனைத்து சுவாரஸ்யங்களையும் பார்க்கவும் மற்றும் கேட்கவும் செய்யலாம். மிகச் சாதாரணமானவர் கூட இவை அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். 

உண்மையில் நாம் 100 சொர்க்கங்களுக்குச் சமமான இடத்தில் வாழ்கிறோம். ஆனால், அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநலம் இழந்து தவிக்கிறோம். உலக விஷயங்கள் மனதை திருப்தி செய்ய முடியாது. மனதை சரி செய்ய வேண்டும் என்றால், உயர்ந்த ஆன்மீக போதனைகள் தேவை.

கிருஷ்ணர் தொடர்கிறார், “போகங்களிலும் ஐஸ்வர்ய தேவைகளிலும் அடிமையாகி, மூழ்கி இருக்கும் போது, அவை பகுத்தாயும் அறிவை அபகரித்து  விடும். அதனால் நாம், சுலோகம் 2.41-இல் சொல்லப்பட்ட பகுத்தாய்ந்து முடிவு செய்யப்பட்ட வழி முறையில், புத்தியின் சமாதி நிலையை அல்லது சமச்சீரான நிலையை அடைவது என்பது அறவே சாத்தியம் அற்றது.”

விளக்கம்:

பொருள்கள் அல்லது பலன்கள் வேண்டி நாம் காரியங்கள் செய்யும் போது, அதனால் கிடைக்கும் போகங்கள், ஐஸ்வர்யங்களில் அடிமையாகி, அதிலேயே மூழ்கி, அந்த வழிகளிலேயே மனம் லயித்து விடுகிறது. அப்படி செல்லும் போது மனம் அமைதியற்று, துன்பத்தில் முடிவடைகிறது. அந்த பாதைகள் நற்கதி கொடுக்காது. (2.42, 2.43).

இந்த துன்பத்துக்கு மாற்று பாதை, 2.41-இல் சொல்லப்பட்ட  பகுத்தாய்ந்த வழிமுறை மட்டுமே (ஆன்மீக ஞானத்தைக் கற்றுக்கொள்வதும், அதை நாம் வாழ்வில் எதைச் செய்தாலும் அந்த அறிவைப் பயன்படுத்துவதும் ஆகும்.)

போகத்தில் லயித்த அமைதியற்ற மனத்துக்கு, பகுத்தாய்ந்த வழிமுறையை ஆராயவோ, புரிந்துகொள்ளவோ, பற்றிக்கொள்ளவோ முடியாது. புரியாத ஒன்றை பிரயோகப்படுத்த முடியாது.  பிரயோகப்படுத்தாத வரை சமாதி நிலைக்கு சாத்தியம் அறவே இல்லை. 

பொருட்கள் மீது பற்று → அமைதியற்ற மனம் → கவனமற்ற புத்தி → பகுத்தாய்ந்த வழிமுறையை புரிந்து கொள்வது இல்லை → சமாதி நிலை இல்லை. 

பொருட்கள் மீது பற்றை விடுவது → அமைதியான மனம் → கவனமுள்ள புத்தி → பகுத்தாய்ந்த வழிமுறையை புரிந்து கொள்வது → வாழ்வில் பிரயோகப்படுத்துவது → சமாதி நிலை 

சமாதி நிலை: எந்தவித வேண்டுதலும் விருப்பமும் இல்லாத அந்த வெற்று நிலை தான் சமாதி அல்லது balanced or neutral stage. 

கிருஷ்ணர் தொடர்கிறார், “சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களை பற்றியது வேதம். அந்த முக்குணங்களை பற்றிய புரிதல்களை விட்டுவிடு. அதே போல் பாவ, புண்ணியம் என்ற இருமைகளையும் விட்டுவிடு. சத்துவம் என்ற தூய நிலையில் மாறாது நிலைத்து இருப்பாய். 

யோகக்காரனாக இருந்து செல்வங்கள் சேகரிக்கவும் அதை பாதுகாக்க வேண்டும் என்பதையும் விட்டு விடு. உனக்குள் ஜோதியாய் சுயமாக இருக்கும் “அதில்” மட்டும் திளைத்திரு.”

விளக்கம்:

ஆன்மீகத்தின் படி, சத்துவம் உயர்ந்த நிலை, ராஜசம் மத்திய நிலை, தாமசம் கீழான நிலை என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. நாம் நற்காரியங்கள் செய்தால், அடுத்த பிறவியில் உயர் நிலையை அடைவோம். எடுத்துக்காட்டாக, ராஜசத்திலிருந்து சத்துவம், சத்துவத்தில் இருந்து சுவர்க்கத்தை அடைவோம். நாம் தீய காரியங்கள் செய்தால், கீழிறங்கி, எடுத்துக்காட்டாக, ராஜசத்திலிருந்தால் தாமசம் அடைவோம் என்றும் வேதம் சொல்கிறது. 

வேதம் சொல்கிறது, “நல்வினை, தீவினை (இருமை) என்ற காரியங்களின் பலனாக முக்குணங்களில் ஒன்றை அடைவோம். அந்த குணங்களுக்கு ஏற்றவாறு செல்வம், போகம் அமையும்.  அதாவது நல்ல பிறவி வேண்டும் என்றால் நல்வினைகள் செய்.” 

கிருஷ்ணர் சொல்கிறார், “இரு வினைகளையும், அந்த வினைகளின் பலனான (வசனம் 2.38, 2.39) முக்குணங்களையும், அதன் பலனாக கிடைக்கும் செல்வம், போகம் பற்றியும்  சிந்திக்கவோ, வாழ்வின் நோக்கமாகவோ கொள்ள வேண்டாம். வேதத்தின் படி, முக்குணங்கள் பிறவி தோறும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் பகுத்தாய்ந்த வழிமுறையை பற்றிக்கொண்டால், தூய சத்துவத்தில் மாறாமல் நிலையாக இருப்பாய். பலன்கள், அதை பெறும் வழிகள், இந்த இரண்டையும் அடைய வேண்டும் என்ற நோக்கம், இவை அனைத்தையும் விட்டு விட்டு அதற்கு பதில், “அதில்” நிலைத்து இரு”  என்கிறார்.

முந்தைய சுலோகத்தில் “அதில்” நிலைத்து இருக்க சொன்ன கிருஷ்ணர், “அதில்”  நிலைத்திருப்பது எவ்வளவு உன்னதமானது என்று இந்த சுலோகத்தில் சொல்கிறார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “எல்லா பக்கமும் நிரம்பி வழியும் நீர்நிலைகள் சூழ்ந்திருக்கும் ஒரு இடத்தில்  எப்படி கிணறு போன்ற சிறிய ஊற்றுக்கு எந்த உபயோகமும் இல்லையோ ,  அது போல, பிரம்மத்தை உணர்ந்த ஒருவருக்கு, வேதங்களால் எந்த உபயோகமும் இல்லை.”

விளக்கம்:

கங்கை நதியால் சூழப்பட்ட நிலப்பரப்பில் வாழும் ஒருவருக்கு, அவர் வீட்டின் கிணற்று நீர் உபயோகமற்று போகிறது. அதாவது அந்த கிணற்று நீரால் அவருக்கு கிடைக்கும் நலன்களை விட, கங்கை நதியின் பயன் ஆயிரம் மடங்கு ஆகும். கிணறு போன்றது வேதம். வேதத்தை படித்து, அறிந்து வாழ்வில் பிரயோகிப்பதால்  பலன் இருக்கும். ஆனால் அந்த பலனுக்கு ஒரு வரையறை அல்லது எல்லை உண்டு. பகுத்தாய்ந்து முடிவு செய்யப்பட்ட வழிமுறையை பின்பற்றி, பிரம்மத்தை (“அதை”) உணர்ந்தவர்கள்,   “அதில்” நிலைத்திருக்கும் போது அந்த நிலை எவ்வளவு உயர்ந்தது, உன்னதமானது என்கிறார் கிருஷ்ணர். 

வேதத்தின் அனுபவத்தால் கிடைக்கும் நிலையை, பிரம்மத்தை உணர்ந்தவர்களின் நிலையோடு  (உச்ச உணர்வு) ஒப்பீடு செய்ய முடியாது.

“அது” – ஆத்மன், பிரம்மன், சுயம், பரம் ஜோதி போன்ற பல சொற்களால் குறிக்கப்படுகிறது.  

நுட்பமான, ஆழம் நிறைந்த சுலோகம். 

கிருஷ்ணர் தொடர்கிறார், “உன்னுடைய கடமைகளில் மட்டுமே உனக்கு அதிகாரமும் உரிமையும் உண்டு. செயல்களின் பலன்களில் உனக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அப்படி இருக்க,  ‘செயல்களின் பலனில் உரிமை’ என்ற காரணம் (cause) இல்லாமல் போகிற போது, செயல் அர்த்தமற்று போகிறது (effect) என்று நினைத்து, செயலற்ற நிலையை தேர்ந்தெடுக்காதே.”

விளக்கம்: 

செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரம் (control) மற்றும் உரிமை (rights) இல்லை என்று ஏன் சொல்கிறார்?

நம் செயல்கள் மட்டுமே எந்த ஒரு விளைவையும், பலனையும் உண்டு பண்ண முடியாது. ஒரு செயலை நாம் செய்வதாக நினைத்தாலும், அதனால் உண்டாகும் விளைவில், நம்மை சுற்றி வாழும் மனிதர்கள், அவர்களின் எண்ணங்கள், செயல்கள், இயற்கை, அண்டம் என பல கோடி கண்ணுக்குத் தெரியும் சக்திகள் (forces) , கண்ணுக்குத் தெரியாத சக்திகள் (forces), தாக்கத்தை (impact)  ஏற்படுத்துகின்றன. 

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தும் ஒரு  சீரான ஒழுங்கான முறையில் பிரபஞ்சத்தின் பிற சக்திகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன. அதில் நம்மால் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது. அதனால் தான் எவ்வளவு திறமையும் சக்தியும் இருந்தால் கூட என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. 

எடுத்துக்காட்டாக மாம்பழ மரத்தை விதைத்து, பராமரித்து, அது 1000 கிலோ பழங்களை அல்லது 2000 மாம்பழங்களை கொடுக்கும் என்று நிச்சயித்து நம்மால் கூற முடியுமா?  திறமையான சச்சின் டெண்டுல்கரால் கூட இந்த கிரிக்கெட் போட்டியில் 119 ரன்கள் எடுப்பேன் என்று கூற முடியுமா? 

பிரபஞ்சம் நம் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்திலும் இருக்கும்போது மட்டுமே, முடிவைப் பற்றி ஒருவர் உறுதியாக இருக்க முடியும். எனவே, ஒரு காரியத்தின் விளைவில் நமக்கு அதிகாரம் (control) இல்லை.

காரியத்தை செயல்படுத்துவதில் நாம் ஒரு துரும்பு போன்ற கருவி மட்டுமே. செயல்கள் நடக்க எண்ணற்ற சக்திகள் காரணமாக இருக்கும் போது, செயல்களின் பலனை நாம் எப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியும்?  எனவே அந்த விளைவுகளில் நமக்கு உரிமையும் அதிகாரமும் இல்லை. 

செயலின்மை கூடாது என்று ஏன் சொல்கிறார்?

முடிவு நிச்சயமற்றதாக இருப்பதாலும், பலனில் உரிமையை நாம் கோர முடியாது என்பதாலும், நமது கடமைகளைச் செய்வதிலிருந்து நாம் விலக வேண்டும் என்று அர்த்தமில்லை.

கிருஷ்ணர் சுலோகம்-2.31 இல் கூறியது போல், ஒரு செயலைத் தீர்மானிப்பது ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் பெறக்கூடிய அல்லது பெறாத சுயநலப் பலன்களின் அடிப்படையில் அல்ல; அந்த குறிப்பிட்ட நேரம், இடம் மற்றும் சூழ்நிலையின் படி விதிக்கப்பட்ட ஒருவரின் பிரத்யேகக் கடமையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

ஏன் காரியம் செய்யாமல் இருக்கக் கூடாது என்பதை அத்தியாயம் 3-இல் விவரிக்கிறார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “யோக நிலையில் இருப்பவன் எல்லாவித பற்றையும் கைவிட்டு காரியத்தை செய்வான். 

காரியம் கைகூடினாலும், கைகூடாவிட்டாலும் அதைப் பொரு`ட்படுத்தாத சமத்துவ நிலையில் இரு. அந்த சமத்துவ நிலையே யோகம் எனப்படுகிறது.”

முதல் பகுதி:(காரணம்-cause of actions-செயல்கள் ஏன் செய்யப்படுகின்றன?)

காரியங்கள் இரு வகை காரணங்களுக்காக செய்யப்படுகிறது. 

  1. பலன் எதிர்பார்த்து செய்யப்படுகின்றன. அதாவது, இந்த வியாபார ஒப்பந்தத்தை முடித்தால் லாபம் கிடைக்கும், இந்த தேர்வு எழுதினால் உயர்பதவி கிடைக்கும் என்று செய்வோம். பலன் எதிர்பார்க்காமல் காரியம் செய் என்று முந்தைய சுலோகத்தில் சொன்னார்.
  2. பற்றுக்காக செய்யப்படுகின்றன. அதாவது, உறவுகள், பந்தம், பாசம், தனிப்பட்ட மனிதர், மொழி, மதம், இனம், ‘நான்’ என்ற அகந்தை, தற்பெருமை இவற்றின் மீதான பற்றுக்காக செய்யப்படுகின்றன. இவற்றை செய்யும் போது சுய நலமான பலன்கள் கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்காக, அவரின் ஆளுயர படப்பலகைக்கு பால் அபிஷேகம் செய்வது,  மகன் அல்லது மகளுக்காக விலை உயர்ந்த ஆடை வாங்குவது, அந்தஸ்தைக் காட்ட பெரிய விழாக்கள் செய்வது. இது போன்ற எல்லாவித பற்றுக்களையும் கைவிட்டு காரியத்தை செய் என்கிறார் இந்த சுலோகத்தில்.

முந்தைய சுலோகத்தில் (வசனம் 2.38) காரிய பலனை கைவிட்டு காரியம் செய்யச் சொன்ன கிருஷ்ணர், இந்த சுலோகத்தில் எல்லாவித பற்றுக்களையும் கைவிட்டு காரியம் செய் என்கிறார்.

இரண்டாம் பகுதி: (விளைவு – காரிய முழுமை/நிறைவு பெறாமை)

ஒரு காரியம் செய்யும் போது, அதன் விளைவு இரண்டு நிலைகளில் இருக்கிறது. முதல் நிலை காரியம் கைகூடும் நிலை – காரியத்தை முடிப்பது அல்லது முடிக்க முடியாமல் போவது (accomplishment status) . காரியத்தின் இரண்டாம் நிலை பலனடையும் நிலை –  வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும் நிலை  (fruits of action).

எடுத்துக்காட்டாக, ஒரு கதை எழுதுகிறோம் என்றால், அதை முடிப்பது அல்லது முடிக்காமல் பாதியில் விடுவது என்பது முதல் நிலை. இரண்டாம் நிலை கதை புத்தகம் எழுதுவது முடிவடைந்து, பாராட்டைப் பெறுவது அல்லது நன்றாக இல்லை என்று விமர்சனம் படுத்துவது. 

முந்தைய சுலோகத்தில் காரியத்தின் விளைவு வெற்றி, தோல்வியாக இருக்கக்கூடும். அந்த இரண்டையும் பொருட்டாக கருதாத சம நிலையில் இரு என்றார். இந்த சுலோகத்தில் காரியம் கைகூடினாலும், கைகூடாவிட்டாலும் இரண்டையும் பொருட்படுத்தாது, இரண்டையும் சமமாக பாவிக்கும் சமத்துவ நிலையில் இரு என்கிறார். இந்த சமநிலையே யோகம். இந்த யோகத்தில் நிலைத்து நிற்பவனால் பற்றற்ற காரியங்கள் மட்டுமே செய்ய இயலும். அல்லது 

பற்றற்ற காரியங்கள் செய்பவனால் மட்டுமே இந்த யோகத்தில் நிலைத்து நிற்க முடியும்.

இந்த சுலோகத்தில், கிருஷ்ணர் நம்மை சம நிலையான மனநிலையில் இருக்கச் சொல்கிறார். இந்த நிலை முக்கியமானது மற்றும் இது அடுத்தடுத்த சுலோகங்களுக்கான அடிப்படை என்பதால், விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகம் அல்லது சம நிலைக்கான விளக்கம்

எந்த சூழ்நிலையிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதே சமநிலை. அந்த சம நிலையே யோகம். எடுத்துக்காட்டாக அரசியலில் ஈடுபாடு இல்லாத ஒருவர், இரு வலுவான கட்சிகளில் எந்த ஒரு கட்சி ஜெயித்தாலும் அது அவரை பாதிப்பது இல்லை. ஆனால் அவரே தனக்குப் பிடித்த  விளையாட்டு வீரர் ஜெயிக்கும் போதும், அல்லது தோற்க்கும் போதும் உணர்ச்சி வயப்படுகிறார். 

திரைப்படம், அரசியல், விளையாட்டு, மதம் என்று எதனாலும் பாதிக்கப்படாத  ஒருவருக்குக்  கூட தனக்குப் பிடித்த உறவோ, நட்போ, உணர்வுகளைக் காயப்படுத்தும் போது, மனதில் ஒரு வலியை தருகிறது. நாம் எந்த ஒரு விஷயத்திற்கு மதிப்பு தருகிறோமோ, அந்த ஒன்று தான் நம்மை பாதிக்கிறது. வெளி ஆட்களுடன் ஒரு போட்டியில் தோற்றால் மனம் வருந்தும். நம் வீட்டில், பிள்ளைகளுடன் ஒரு விளையாட்டில் நாம் தோற்றால்   மனம் மகிழும். இரண்டுமே தோல்வி தானே. ஆனால், இங்கே நம் மதிப்பீடு வேறுபடுகிறது. மதிப்பீட்டிற்கு தகுந்த படி நம் மனநிலையும் வேறுபடுகிறது. இந்த மதிப்பீடு, அளவுகோல் இதை நீக்கினால், நம்மால், எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்.  நாம் ஒரு விஷயத்தின் மீது கொண்டிருக்கும் பற்றே நம்மை செயலின் பலனில் மதிப்பு வைக்க செய்கிறது. 

இன்றைய சூழ்நிலையில்,  நல்லது நடந்தாலோ, அல்லது கெட்டது நடந்தாலோ, வெற்றி அடைந்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அதற்காக நாம் சந்தோஷப்படவும், துக்கப்படவும் செய்கிறோம். இது மனதில் ஒரு சமமற்ற (imbalance), அமைதியற்ற (restlessness), அதிர்வுகளுடன் (oscillation) கூடிய நிலையை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு சமமற்ற நிலையுமே ஒரு கொந்தளிப்பை (turbulance) உண்டு பண்ணும். சமநிலையில் இருக்கும் போது, எந்த ஒரு பாதிப்பும் வராது. சமமற்ற மனநிலையின் விளைவே, மன நோய். “அது” (ஆத்மன், பரபிரம்மம்) பற்றி நாம் இன்னும் அறிய அறிய அது இந்த சம நிலைக்கு வழி காட்டும்.

புத்தி யோகம் – சம நிலையான மனநிலையில், எந்த சலனமும் இல்லாமல் காரியங்கள் செய்வதே புத்தி யோகம். பகுத்தாய்ந்த முடிவு செய்யப்பட்ட பாதை, புத்தி யோகத்தில் இருக்க வழிமுறைகளை சொல்கிறது. கடைசியாக எழுதிய பதிவில், இதைப்பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டது.

கிருஷ்ணர் தொடர்கிறார், “புத்தி யோகத்தில் காரியங்கள் செய்வது ஒரு வரம். அந்த வழியைத் தவிர்த்த மற்ற எல்லா காரியங்களும், புத்தி யோகத்திலிருந்து வெகு தூரத்திற்கு அப்பாற்பட்ட, எதிரான எல்லையில் உள்ள ஒரு சாபக்கேடு. பாதுகாப்பான, முழுமையான, நல்வாழ்வு நிலையைத் தரும் புத்தி யோகத்தை உறுதியாக பற்றிக்கொள்.   பலனை எதிர்பார்த்துக் காரியங்கள் செய்பவர்கள் அருளையும், கருணையையும் எதிர்பார்த்து வாழும் பரிதாபமான நிலையில் இருப்பார்கள்.”

விளக்கம்: புத்தி யோகத்தில் இருப்பதனால் விளையும் நன்மைகள் என்ன என்பதை கிருஷ்ணர் விளக்குகிறார். வரம் என்பது நாம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நமக்கு கொடுப்பது. அது ஒரு பாதுகாப்பு. எந்த வகையிலும் நமக்கு பிரச்சனை வராது. நம்மை பாதிக்காது. நல்வாழ்வு தருவது. ஆனால், சாபம் என்பது, நமக்கு இன்னல்கள் தருவது, ஆபத்தை விளைவிக்கக் கூடியது. நம்மை பாதிக்கும். புத்தி யோகம் ஒரு வரம். புத்தி யோகத்தைப் பிரயோகிக்காமல் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் சாபம் என்கிறார்.

ஏன் புத்தி யோகத்தில் செய்யாத காரியங்கள் ஒரு சாபம் ?

பலன் கருதி அல்லது பற்றுக்காக செய்யப்படும் காரியங்கள் ஒரு சாபமே ஆகும். 

  1. வெற்றி அல்லது லாபம் என்பது ஒரு போதை. இது போதாது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றே மனம் கேட்கும். மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற உடனே, மாநில அளவில் வெல்ல வேண்டும் என்ற வேட்கை தோன்றும். அதற்குப் பின் தேசிய அளவில் வெல்ல வேண்டும். எல்லாம் வென்று விட்டால், அடுத்த வருடம் இதை விட சிறப்பாக வெல்ல வேண்டும் என்ற உறுதி பிறக்கும். 
  2. வெற்றி மட்டுமே இலக்கு, வேறெதையும் பற்றி கவலை இல்லை என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் எந்த கீழான நிலைக்கும் இறங்கத் தயங்குவதில்லை. அதற்கு சாமர்த்தியம், வியாபார யுத்தி, புத்திசாலித்தனம், இராஜ தந்திரம் என்று மெருகேற்றிய வார்த்தைகள் கூறுவார்கள்.
  3. உழைத்து வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு தோன்றி விட்டால், அவர்களுக்கு, மன அழுத்தம், பதட்டம், அமைதியின்மை தொற்றிக் கொள்கிறது.
  4. தோல்வி அடைந்தால் மனம் சோர்வடைகிறது. நம் மீதான மதிப்பீட்டை நாமே குறைத்துக் கொள்கிறோம்.
  5. மனதிற்கு பிடித்தவர்களுக்காக செய்யும் காரியங்கள், அதீத இன்பத்தையும், வெறுப்பவர்களுக்கு செய்யும் காரியங்கள், அதீத துன்பத்தையும் தருகின்றன. இன்பம் தானே கிடைக்கிறது. அதை அனுபவிக்கலாம் என்று நினைத்தால், இன்பம் துன்பத்திற்கான தூண்டில். மனதில் அமைதி இருக்காது.
  6. இத்தனை மன சலனங்களுடன், மன அமைதியும், ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமற்றது. 

வென்றாலும், தோற்றாலும், நான் என்ற அகந்தை, பயம், கோபம், பேராசை, வஞ்சம், வெறுப்பு, அதீத பற்று (obsession)  இவை நம்மைத் தொடரும்.

இவை அனைத்தும் சிலந்தி பின்னும் வலை போல் நீட்டிக்குமே தவிர நிற்பதில்லை. 

இவை புலி வாலை பிடித்தது போல. நாம் விட நினைத்தாலும், நம்மால் விட முடியாது. 

இவை கண்ணுக்குத் தெரியாமல் கடலில் உள்ள நீர் சுழல் போல. ஒரு முறை சிக்கி விட்டால், மீள முடியாது.

இத்தனை இன்னல்களை உடைய இந்த பலனை எதிர் பார்த்து அல்லது பற்றோடு  செய்யும் காரியங்களின் முடிவான முடிவு ஒரு பாதாள சிறை போன்றது, உள்ளே போய்விட்டால் நாம் நினைத்தாலும் வெளியில் வர முடியாது. 

முந்தைய சுலோகத்தில் புத்தி யோகத்தில் செய்யும் காரியங்கள் ஒரு வரம் என்றும், அதைத் தவிர்த்த மற்ற காரியங்கள் ஒரு சாபம் என்று சொன்னார்.  

கிருஷ்ணர் தொடர்கிறார், 

“புத்தி யோகத்தில் நிலைத்திருப்பவர்கள், அதைப் பிரயோகப்படுத்தி செய்யும் காரியங்களால் நல்வினை, தீவினை என்ற கருத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். ஆகவே புத்தி யோகத்தைப் பற்றிக்கொள். 

மற்ற காரியங்களுடன் ஒப்பிடும் போது, புத்தி யோகத்தில் செய்யப்படும் காரியங்கள் **மட்டும்** தான் நல்வினை, தீவினை என்ற வரையரைகளில் இருந்து விதிவிலக்கும், அப்படி அந்த கட்டுக்களில் இருந்து விலக்கு கிடைப்பதால்  பாதிப்படையா நிலையையும் பெறுகின்றன.” 

விளக்கம்:

புத்தி யோகத்தில் செய்யும் காரியங்களினால் (2.38) விளையும் தீவினைகளுக்கு பொறுப்பாக மாட்டாய் என்றும், அந்த செயலுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாமல் போகும் (2.39) என்று சொன்ன கிருஷ்ணர், இந்த சுலோகத்தில், புத்தி யோகத்தில் காரியங்கள் செய்பவர்கள், நல்வினை-தீவினை என்ற கருத்துக்களின் கட்டில் இருந்து  விடுவிக்கப்படுகிறார்கள் என்கிறார்.

நல்வினை, தீவினை:

இந்த சமுதாயம் காரியங்களை நல்லவை, கெட்டவை என்று நிர்ணயித்து இருக்கிறது. அடுத்தவருக்கு உதவுவது, தீங்கு செய்தவர்களை மன்னிப்பது, போன்றவை நற் செயல்கள் என்றும், பிறரை துன்புறுத்துவது, திருடுவது போன்றவை கெட்ட காரியங்கள் என்றும் சமுதாய ஒழுக்கத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ளன. நாம் இந்த வரையரைக்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம். 

சுலோகத்தின் முதல் பகுதி:

புத்தி யோகத்தில் செய்யும் காரியங்கள் மட்டும் நல்லவை, கெட்டவை என்ற சமுதாய மதிப்பீட்டின் கீழ் வராது. எடுத்துக்காட்டாக, ஒரு நீதிபதி செய்யும் செயல்கள் எப்படி நடுநிலையாய் இருக்கிறதோ, அதே போல் நடுநிலையில் இருந்து தான் புத்தி யோகத்தில் இருப்பவர்கள் செயல்படுகிறார்கள். 

ஒரு கொலைக் குற்றவாளிக்கு நடுநிலையில் நின்று தூக்கு தண்டனை தந்து தீர்ப்பு சொல்லும் நீதிபதியைத் தீயவர் என்று இந்த உலகம் தூற்றாது. அவர் நல்லவர் என்றும் மகுடம் சூட்டாது. அவர் கடமையை அவர் சரியாக செய்தார் என்று தான் சொல்வர். அது போல புத்தி யோகத்தில் நிலைத்து காரியங்கள் செய்பவர், நற்செயல்கள், தீய செயல்கள் என்ற கருத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கப்படுகிறார். 

சுலோகத்தின் கடைசி பகுதி: 

புத்தி யோகத்தில் செய்யும் காரியங்கள், நல்வினை-தீவினை என்ற வரையரைகளில் இருந்து விதிவிலக்கும், அப்படி அந்த கட்டுக்களில் இருந்து விலக்கு கிடைப்பதால்  பாதிப்படையா நிலையையும் பெறுகின்றன.

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், நிறுவனத்தின் விதிமுறைகள், கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக செயல்படுகிறார். அது போல புத்தியோகத்தில் இருப்பவருக்கு இந்த சமுதாயத்தின் சட்டங்களான, நல்வினை-தீவினை என்ற கட்டுப்பாட்டில் இருந்து விதி விலக்கும், அந்த விலக்கு இருப்பதனால், அதனால் பாதிப்படையா நிலையையும் பெறுகிறார்.

புத்தியோகம் எங்கு நம்மை கொண்டு செல்லும் என்பதை முந்தைய சுலோகங்களில் வரம் என்றும், நல்வினை தீவினையின் கட்டுக்களில் இருந்து விலக்கு அளிக்கும் என்றும் சொன்ன கிருஷ்ணர் அதன் தொடர்ச்சியாக… 

கிருஷ்ணர் தொடர்கிறார், “காரியம் தோன்றும் நேரத்தில் இருந்தே புத்தி யோகத்தை பிரயோகப்படுத்தி, விளைவுகளை எல்லாம் நிராகரிக்க பழகிக் கொண்டவன், அதை ஆழ்மனதில் (Subconscious mind) இயல்பாக்கிக் கொள்வான்.

அது, இந்த ஜென்மத்தில் இருக்கும் பற்று, பந்தங்களை எல்லாம் மொத்தமாக மிச்சம் எதுவும் இல்லாமலும், அந்த பந்தங்கள் மீண்டும் தலைஎடுக்காதபடியும், வேரறுத்து, நிரந்தரமாக, விடுதலை அளிக்கிறது.  இந்த சுதந்திரத்தன்மை மட்டுமே துன்பமற்ற பதத்திற்கு கொண்டு (நிலைக்கு) சேர்க்கும்.”

விளக்கம்:

சுலோகம் –  முதல் பகுதி:

காரியம் தோன்றும் இடத்திலேயே விளைவுகளை நிராகரிப்பது என்பது, நாம் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே, அதனால் கிடைக்கும் பலன்களில் ஆசையைத் துறப்பது ஆகும். எடுத்துக்காட்டாக, நாம் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறோம் என்றால், அதில் பரிசு கிடைக்காமல் போன பின், “பரிசு என்பது ஒரு பொருள், அது கிடைக்காமல் போனால் என்ன, நான் இதில் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று நினைப்பது ஒரு நல்ல மனநிலை. ஆனால், கிருஷ்ணர் சொல்வது, அந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற எண்ணம் ஆரம்பித்த உடனே,  போட்டியில் வெற்றி பெறுவேனா இல்லை தோல்வி அடைவேனா என்ற எந்த மன சலனமும் இல்லாமல், விளைவுகளை நிராகரித்து, செயலை செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவது ஆகும்.

இதை யாரால் செய்ய முடியும்? ஆழ்மனதில் (Subconscious mind) இயல்பாகவே காரியத்தின் விளைவுகளை துறந்தவரால் மட்டுமே இதை செய்ய முடியும். 

ஆழ்மனதில் இருந்து இயல்பாக காரியங்கள் செய்வது என்பது, நம்மை அறியாமலே செய்யும் அனிச்சை செயல்கள் (reflux actions) ஆகும். எடுத்துக்காட்டாக, ஆடை விலகினால், நம் கை நம்மை அறியாமல் அதை சரி செய்வது போல, காற்று வீசும் போது கண்களை மூடிக்கொள்வது போல், மிதிவண்டியை ஒரு முறை கற்றுக் கொண்ட உடனே எப்போது ஓட்டினாலும் நம்மை நிலைப்படுத்திக் கொள்வது (balance) போல ஆகும். 

இது போலவே, ஆழ்மனதை தொடர் பயிற்சியின் மூலம், விளைவுகளை துறப்பதில்  அல்லது நிராகரிப்பதில் பழக்கப்படுத்தி, சீரமைத்தவர்  (mind conditioning) மட்டுமே, காரியம் தோன்றும் முன்பே அதன் விளைவுகளை நிராகரிப்பார்.

சுலோகம் –  இரண்டாம் பகுதி:

ஆழ்மனதை பழக்கப்படுத்தி, இயல்பாகவே காரியத்தின் விளைவுகளை நிராகரிக்கப் பழகியவர், இந்த ஜென்மத்தில் எல்லா பற்று, பந்தங்களில் இருந்து முழுமையாக, நிரந்தரமாக, விடுதலை பெறுகிறார்.  இந்த சுதந்திரத்தன்மை மட்டுமே துன்பமற்ற பதத்திற்கு கொண்டு (நிலைக்கு) சேர்க்கும்.

நாம் அனைவரும் தினமும் துன்பங்களை அனுபவித்து, மனதில் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ்கிறோம். அதை அகற்றுவதற்காக, நாம் தொடர்ந்து மேலும் துன்பங்களையும் பாதுகாப்பற்ற உணர்வையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்த வாழ்க்கையில் (ஜென்மத்தில்) உள்ள எல்லா துன்பங்கள் மற்றும் பாதுகாப்பற்ற உணர்விலிருந்து விடுபடுவதற்கு ஒரே ஒரு பாதை (கச்சந்தி) தான் உள்ளது. 

அது, அனைத்து பந்தங்கள் மற்றும் பற்றுக்களிலிருந்து நிரந்தரமான மற்றும் மாற்ற முடியாத (irreversible) விடுதலையை அடைவதாகும். 

இது, ஒரு பயிற்சி செய்யப்பட்ட அல்லது பழக்கப்படுத்தப்பட்ட மனம் (conditioned mind) மூலமே அடைய முடியும். அப்படி மனதை பழக்கப்படுத்துவது சாத்தியமா? நம்மால் முடியும். இது, நாம் ஒரு செயலை செய்யலாம் என்ற யோசனை தோன்றிய தருணத்திலிருந்தே, பகுத்தாய்ந்த அறிவை (analytical knowledge) செயல்களில் பிரயோகப்படுத்துவதால், செயல்களின் பலன்களை எல்லா நிலைகளிலும் (செயல் ஆரம்பம், தொடர்வது, முடிப்பது) நிராகரிக்கும்  தன்மையைப் பெறுவோம். அதைப் போல், தொடர்ந்து செய்வதன் மூலம் அது ஒரு நடைமுறையாகி, அனிச்சையான மனமாகிறது. 

இந்த பகுத்தாய்ந்த அறிவு என்பது, கீதையைப் படித்து, அதில் கற்றுக் கொண்ட அறிவை, நம் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளுடன் (events) ஒப்பிட்டுப் பகுத்தாய்வது (analyse) என்பதே ஆகும்.

இந்த சுலோகம் பகவத் கீதையின் போதனைகளின் சுருக்கமாகும். இது, நமது இலக்கு என்னவென்பதையும், அதை எவ்வாறு அடைய முடியும் என்பதையும் இரண்டு வரிகளில் உள்ளடக்கியுள்ளது. இந்த சுலோகத்தை நாம் தொடர்ந்து நினைவில் வைத்திருந்தால், பகவத் கீதையைக் கற்பதிலும் மற்றும் அதைப் பிரயோகப்படுத்துவதிலும், உறுதியான மற்றும் தீர்மானமான மனதைப் பெறுவோம்.

முந்தைய சுலோகத்தில், காரியம் தொடங்கும் முன்பிலிருந்தே காரியத்தின் பலனைத் துறந்து அதை ஆழ்மனதின் இயல்பாக்கிக் கொண்டவன் எல்லா பந்தம், பற்றுக்களையும் நிரந்தரமாக வேரறுத்து துன்பமற்ற நிலையை அடைவான் என்று சொன்ன கிருஷ்ணர், அதை தக்கவைத்துக்கொள்ளவும், அதற்கு அடுத்த நிலையையும்  அடுத்தடுத்து எடுத்துரைக்கிறார்.

கிருஷ்ணர் தொடர்கிறார், “எப்போது நீ ஆசைகள், பந்தம், பற்று, நல்வினைகளுடன் ஆழ்ந்த பிணைப்பு, அறியாமை போன்ற மோகம் என்ற அடர்ந்த காட்டை புத்தி யோகத்தால் கடந்து விட்டாயோ, அப்பொழுது உனக்கு புதிதாக கற்றுக் கொள்வதில் எந்த ஈடுபாடும் இருக்காது – அவை ஏற்கனவே கற்பிக்கப்பட்டதாவகவோ அல்லது இனி புதிதாக கற்பிக்கப்படுவதாகவோ இருந்தாலும்.” 

விளக்கம்:

பகவத்கீதையைக் கற்று (அறிந்து, புரிந்து கொள்வது), அன்றாட வாழ்க்கையில் நடப்பவைகளுடன் ஒப்பிட்டு பகுத்தாய்ந்து, அதை நாம் செய்யும் செயல்களில் பிரயோகப்படுத்துவது (எடுத்துக்காட்டு: பலன் கருதாமல் செய்யும் செயல்கள், பற்று கருதாமல் செய்யும் செயல்கள்) நம்மை நடுநிலைக்கு எடுத்து செல்லும். அதுவே புத்தி யோகம்.

அதன் பிறகு அந்த புத்தி யோகத்தை மீண்டும் மீண்டும் காரியத்தில் பிரயோகப்படுத்தி, செயல் தொடங்கும் முன்பே விளைவுகளை நிராகரிப்பதை பழக்கி, அதை ஆழ்மனதில் இருந்து செய்வதை இயல்பாக்கிக் கொண்டவன்  அனைத்து பந்த பாசங்களில் இருந்து விடுதலை அடைவான். அவன் மனம் துயரமற்ற நிலையை அடையும். 

இது ஒரு முழுமையான நிலை. இந்த முழுமையான நிலையை அடைந்த பிறகு, மீண்டும் அறிதலின் தேவை இருக்காது. அதாவது, ஒரு கல்லூரிப் பட்டப் படிப்பை  முடித்த பிறகு, நமக்கு மீண்டும் பள்ளிப் புத்தகங்கள் அல்லது அதே பட்டத்தைப் பெறுவதற்கான புத்தகங்கள், அதன் மூலம் கிடைக்கும் அறிவு என்பது தேவை இருக்காது.

ஒரு காட்டு வழியில் பயணம் செய்யும் போது, வரைப்படத்தின் (map) தேவை இருக்கும். காட்டை விட்டு வெளியில் வந்தவுடன், அந்த வரைப்படத்தின் தேவை இருக்காது. அப்படி காட்டைவிட்டு வெளியில் வந்த பின்பு வேறு ஒருவர் நமக்கு மீண்டும் அந்த காட்டுப் பாதையின் வழிகள் மற்றும் அதன் குறுக்கு வழிகள் பற்றி சொல்லி வழி நடத்துகிறார் என்றால் அதைப் பற்றி கேட்க நமக்கு ஈடுபாடு இருக்காது. தேவையும் இருக்காது. 

அது போலவே, முழுமையான நிலையை அடைந்த பிறகு நமக்கு எந்த வேத அறிவும் தேவைப்படாது. யாரோ ஒருவர் நம்மிடம் மீண்டும் பகவத்கீதையையே விளக்கினாலும், விவாதம் செய்தாலும் அதில் ஈடுபாடு இருக்காது. 

“ஏற்கனவே கற்பிக்கப்பட்டதாகவோ”  என்று இந்த சுலோகத்தில் உள்ளது – அது நாம் இது வரை கற்ற பகவத்கீதையையும் மற்றும் புத்தியோகத்துக்கு நம்மை இட்டுச்சென்ற பிற ஆன்மீக நூல்களையும் குறிப்பதாகும்.

“இனி புதிதாக கற்பிக்கப்படுவதாகவோ ” என்பது நாம் இது வரை கற்றறியாத புது ஆன்மீக நூல்களை தேடிச் சென்று கற்பதைக் குறிக்கும். இரண்டுக்கும் தேவையும் இருக்காது; ஈடுபாடும் இருக்காது என்கிறார். 

இவற்றை மீண்டும் கேட்பதும், கற்பதும் நம் மனதை குழப்பமடைய செய்து, நம்மை நடுநிலையில் இருந்து பிறழ செய்யும். எனவே நிலை பெற்ற புத்தியை பாதிக்க கூடிய புதிய அறிதல்களை பெற முயற்சிக்க வேண்டியது இல்லை.

முந்தைய சுலோகத்தில் “எப்போது ஆசைகள், பந்தம், பற்று, நல்வினைகளுடன் ஆழ்ந்த பற்று போன்ற மோகம் என்ற அடர்ந்த காட்டை புத்தி யோகத்தால் கடந்து விட்டாயோ, அப்பொழுது உனக்கு புதிதாக கற்றுக் கொள்வதில் எந்த ஈடுபாடும் இருக்காது” என்று கூறிய கிருஷ்ணர்,

கிருஷ்ணர் தொடர்கிறார், “(அதையும் மீறி) விபரீதமான போதனைகள் திணிக்கப்பட்ட போதிலும் எப்பொழுது உன்னுடைய நடுநிலை சீர்குலையாமல்  (non-wavering neutrality) இருக்கிறதோ,  எப்பொழுது புத்தி பிறழாமல் (Immovable budhi) நிலைத்து இருக்கிறதோ, அப்பொழுது யோகத்தை அடைவாய்”

விளக்கம்:

பகவத் கீதையை கற்றறிவது → புரிந்து கொள்வது → **வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பகுத்தாய்வது (இதுவே புத்தி)  → புத்தியை பிரயோகப்படுத்தி நடுநிலை** → அதுவே அனிச்சை செயலாகி துன்பமற்ற நிலை → யோகம்

காற்று வீசாத போது தீபம், ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கும். அது போலவே புத்தி யோகத்தால் அடைந்த நடுநிலை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனால் காற்று வீசும் போது தீபச்சுடர் அசையும்; பலத்த காற்று வீசினால் அது அணைந்து போகும். ஆனால், அப்படியான சூறாவளி காற்று வீசினாலும் ஆடாத தீபம் போல் நடுநிலையில் உள்ள புத்தி, பிற தவறான போதனைகளை கேட்கும் போதும், புத்தியின் நடுநிலை சீர்குலைந்து போகாது திடமாக இருக்க வேண்டும்.  (Neutrality gets affected due to wavering mind).

புத்தியின் நடுநிலை அசைந்தால், நாம் கற்றறிந்து, பகுத்தாய்வு செய்த புத்தியின் முடிவுகளை வேறு எண்ணங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் (Analytically concluded buddhi displaced by other thoughts). ஆயிரக்கணக்கான டன் எடைகள் கொண்ட ராக்கெட்டையே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்க்க முடிகிறது. அது போலவே நம் பகுத்தாய்ந்த அறிவின் மூலம் பெற்ற புத்தியை இடம் பெயர்த்து (buddhi Moved) வேறு எண்ணங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் (replaced by other thoughts). 

எப்பொழுது அசையாத (Nischalam – Non wavering) நடுநிலை, அசைக்க முடியாத (achalam – immovable) புத்தி  இவற்றில் நிலைத்து நிற்கிறாயோ அப்போது யோகத்தை அடைவாய் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இங்கு யோகம் என்று எதை குறிப்பிடுகிறார் கிருஷ்ணர்? 

“யோகம்” என்பது நம் வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் பரந்த வரைமுறை உள்ள சொல் ஆகும்; ஆனால் பகவத்கீதையில் இது பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சுலோகத்தில், யோகம் என்பது ஆன்மிக பயணத்தின் இறுதியான உயர்ந்த நிலையை குறிக்கிறது. அதைப்பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்.

இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் சம நிலையில் உள்ள வரை, அமைதியுடன் இருக்கும். சமநிலை எங்கு பாதிக்கப்படுகிறதோ அங்கு, ஒரு பரிதவிப்பு உண்டாகும். அதாவது திரும்பவும் சமநிலைக்கு வர வேண்டும் என்ற பரிதவிப்பு. பரிதவிப்பு என்பது வலியுடன் கூடிய ஏக்கம். இந்த பரிதவிப்பு ஒரு ஆற்றலைக் கொடுத்து சமநிலை இல்லாதவற்றை  இயக்கத் துவங்கும். அதாவது சம நிலைக்கு திரும்புவதற்கான ஆற்றலைக் கொடுத்து, சம நிலையை நோக்கிப் போக அந்த ஆற்றல் உதவும். இது தான் உயிருள்ளவை, உயிரற்றவை,  கண்ணுக்குத் தெரிபவை, கண்களுக்குத் தெரியாதவை, நுண்ணிய அணு முதல், பிரபஞ்சம் வரை அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. 

எடுத்துக்காட்டாக, ஒரு அணுவில் புரோட்டான்களும்  எலக்ட்ரான்களும் சம அளவில் உள்ள வரை அங்கே மின்சாரம் (Electrical charge) உருவாவது இல்லை. ஆனால் அணுவுடன் தளர்வாக இணைக்கப்பட்ட எலக்ட்ரான்கள், அணுவில் இருந்து பிரிந்தவுடன் பரிதவிப்பு உண்டாகி, ஓடி, மின்சாரத்தை உருவாக்குகின்றன. அதாவது சமநிலை பாதிக்கப்பட்டவுடன் அமைதி இழந்து ஆற்றல் பெறுகிறது. மிக அதிகமான எலக்ட்ரான்கள் மிக உயர்ந்த மின்சாரத்தை உண்டாக்குகின்றன (High imbalance causes high electrical current)

அது போல, நாம் “அதில்” இருந்து வேறுபட்டு, அதாவது வேறுபட்டதாக நினைத்து ஒரு பரிதவிப்புடன் வாழ்கிறோம். நம் பரிதவிப்பு நம்மை அலைக்கழிக்கிறது. நாம் ஆற்றல் பெற்று, நிற்காமல் மன அமைதி இழந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த  தேடல் நம்மை அறிவதில் நிறைவு பெறுகிறது. பரிதவிப்பு அடங்கி சம நிலைக்கு வரும் அந்த நிலையே யோகம். ஆத்ம ஞானம் (Analytically concluded buddhi) – தன்னை உணர்தல் மட்டுமே பரிதவிப்பற்ற திடமான சமநிலையை கொடுக்கும். 

கீழே மூன்று சூழ்நிலைகளை ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொள்வோம்.  

  1. ஒரு குழந்தையை ஒரு தாய் தொலைத்து விடுகிறார். அவர் பரிதவிப்புடன் தன் குழந்தையைத் தேடுவார். அவர் அந்த குழந்தையைக் கண்டுபிடித்து சேர்ந்தவுடன் அவரின் பரிதவிப்பு அடங்கி அமைதியடைகிறார்.  
  1. ஒரு மனைவி தன் கணவனைத் தவறாக புரிந்து கொள்கிறார். ஒரு வீட்டில் வாழ்ந்தாலும் மனதளவில் பிரிந்து வாழ்கிறார். ஒரு நாள் உண்மையை புரிந்து கொண்டவுடன், மனதில் உள்ள பேதம் மறைந்து கணவருடன் இணைகிறார். அவரின் பரிதவிப்பு மறைகிறது.
  1. கருப்புக் கண்ணாடியை (Sun glasses) தலையில் ஏற்றி மாட்டிக்கொண்டு சில சமயங்களில் மறந்து போவோம். அதை ஒரு பரிதவிப்புடன் தேடிக்கொண்டே இருப்போம். அது நம்மிடம் நம் தலையிலேயே உள்ளது என்று தெரிந்தவுடன் நம் தேடலும், பரிதவிப்பும் மறைந்து போகும்.

எடுத்துக்காட்டு 1: நம்மிடம் இருந்து உடலால் வேறுபட்டு நிற்கும் ஒன்றுடன் இணைவது. 

எடுத்துக்காட்டு 2: நம்மிடம் இருந்து மனதால் வேறுபட்டு நிற்கும் ஒன்றுடன் இணைவது. 

எடுத்துக்காட்டு 3:  நம்மிடமே உள்ள நம் அங்கமான ஒன்றுடன் இணைவது. 

நாம் நம்மில் இருக்கும் “அதை” அறிவதே யோகம். இது எடுத்துக்காட்டு 1,2-ல் கூறி உள்ளதைப் போன்ற நம்மிடம் இருந்து உடலால் அல்லது மனதால் வேறுபட்ட ஒன்றுடன் சேர்வது அல்ல. இது எடுத்துக்காட்டு 3-ல் கூறி உள்ளதைப் போன்ற ஒரு இணைவாகும். நம்முள் இருக்கும் “அதை” உணராமல் இருந்த நாம் “அதை” உணர்வதே யோகம். இந்த உணர்வு நிலை வரும் வரை நம் பரிதவிப்பு, அதனால் வரும் தேடல், அது தரும் அமைதியின்மை, ஆற்றல், ஓட்டம் அனைத்தும் இருக்கும். ஆனால் ஆத்ம ஞானத்தால் நடுநிலையான திட புத்தி இருக்கும் பொழுது அனைத்து பரிதவிப்புகளும் அடங்கி இருக்கும். அதுவே சாந்த நிலை. அதுவே தன்னை முழுதும் உணர்ந்த யோக நிலை.

அர்ஜுனன் கேட்கிறார் “கிருஷ்ணா! உயர்ந்த ஞானத்தில் நிலைத்திருப்பவரின் (ஸ்திதபிரக்ஞன்) சமாதி  நிலை (நடுநிலை) எப்படிப்பட்ட  பண்புகளை உடையது என்று விளக்கிச் சொல்! அவரின் உறுதியான புத்தி நிலையில் எதிர் வினையை (reaction) எப்படி வெளிப்படுத்துவார் (express)? அவருடைய உள்ளத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?”

விளக்கம்:

முந்தைய சுலோகம் 2.53-இல் முடிவின் முடிவாக (Final conclusion) ஆத்ம ஞானத்தால் “அதை” உணர்ந்து யோகத்தை அடைவார் என்று கிருஷ்ணர் கூறினார்.

யோகிகள் அல்லது ஞானிகளைப் பற்றி நாம் அறிய நேரும் பொழுது, ​​அவர்கள் மற்றவர்களில் இருந்து எந்த வகையில் மாறுபட்டு இருக்கிறார்கள், அந்த யோக நிலை எவ்வாறு சாத்தியமானது? அவர்கள் அந்த நிலையை எந்த வழிகளில் அடைந்தார்கள்? என்று தெரிந்து கொள்ள நினைப்போம். அதைத்தான் அர்ஜுனன் இந்த சுலோகத்தில் கேட்கிறார். யோகி/ஞானி ஆவதற்கு ஏதுவாக/உபகாரமாக(instrumental) இருந்த அந்த தனித்துவமான அறிவுகள் எது என்று புரிந்துகொள்ள பகவத் கீதையில் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அடிப்படையில் அவர்களின் இயல்பு மற்றும் நடத்தையின் அறிகுறிகளையும், அந்த இயல்பு மற்றும் நடத்தைக்குப் பின்னால் உள்ள அந்த பகுத்தறிவையும் அறிந்துகொள்வது,  அந்த பகுத்தறிவுப் பாதைகளைப் பின்பற்றி அவர்களில் ஒருவராக நாம் மாற நமக்கு உதவும். பகவத் கீதை போன்ற ஆன்மீக நூல்களின் ஒரே நோக்கமும் அதுதான்.

இந்த சுலோகத்தில் அர்ஜுனன் உறுதியான புத்தியை கொண்டவர் பற்றி கேட்கும் கேள்விகளின் தொகுப்பு:

  1. எதிர்வினை/பதில் நடத்தை (reactive behavior): வெளி உலகத்தின் அனுகூலமான அல்லது அனுகூலமற்ற பொருள்களையோ, சூழல்களையோ சந்திக்கும் பொழுது, அவைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள், அது அவர்களை எப்படி பாதிக்கிறது, அந்த பாதிப்பை அவர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் (react) ?. அவர்கள் எதிர்வினை அல்லது பதில் நடத்தை (Reaction, expression, response behavior​) எப்படி இருக்கும்? அவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவார்களா? அவர்களிடம் “பதவி வேண்டுமா?” என்று கேட்டால் அதற்கு எதிர் வினை எப்படி இருக்கும்? ஒருவர் அவர்கள் கண் முன் இறந்தால் அதற்கு  எப்படி React செய்வார்கள் ? அவர்களுக்கு மரியாதை செய்தால் அதை எப்படி ஏற்பார்கள்? அவர்களை மதிக்காமல் போனால் அல்லது அவமரியாதை செய்தால் எப்படி அதை எடுத்துக்கொள்வார்கள்?
  1. உள்ளத்தின் நிலை: (inner being or internal composition): வெளி உலகத்தின் தாக்கங்கள் இருக்கும் போது ஒருவரின் எதிர்வினை அல்லது நடத்தைகளை நம்மால் காண முடியும் அல்லது உணர முடியும். ஆனால் வெளி உலகத்தின் தாக்கங்கள் இல்லாத போது, அவர்கள் உள்ளத்தின் நிலை எப்படி இருக்கும்? வீட்டில் யாரும் இல்லாத போது, செய்வதற்கும் எந்த வேலையும் இல்லாத போது நம்மால் அமைதியாக இருக்க முடிவதில்லை; அதுபோல் காட்டில் அவர்களுடன் யாரும் இல்லாத போது அவர்களால் தனிமையில் இருக்க முடியுமா? இது போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?  அவர்களுக்கும் நம் போல் தவிப்பு, ஆசைகள், நிறைவேறாத ஆசைகள், தாழ்வு மனப்பான்மை, உயர்ந்த மனப்பான்மை, ஏக்கம், திருப்தி இன்மை, ஏமாற்றங்கள், கோபம், வஞ்சம், பரிதவிப்புகள், உள்ளக்கொதிப்புகள் இருக்குமா?
  1. சுய முயற்சி செயல்கள் (proactive engagement): நாம் சுயமுயற்சி எடுத்து ஏதோ ஒரு காரியம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் காரியமின்மையுடன் இருக்கிறார்களா? காரியங்கள் செய்வார்களா? செய்தால், எதன் காரணமாக அவர்கள் காரியங்கள் செய்கிறார்கள்? காரியங்கள் செய்வார்கள் என்றால், அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால், வருத்தப்படுவார்களா? இல்லை குற்ற உணர்வு கொள்வார்களா? அதே நேரத்தில் நல்லது செய்தால் பெருமைப்படுவார்களா? காரியம் செய்ய முயற்சி மேற்கொள்ளும் போது தடை ஏற்பட்டால் அவர்கள் கோபப்படுவார்களா? 

அர்ஜுனன் அடிப்படையில் யோகிகள் அல்லது ஞானிகளின், “எதிர்வினை/பதில் நடத்தை (Reaction) – நடவடிக்கை இன்மை (No Action) – சுயமுயற்சி செயல்கள் (Proaction)” பற்றி  கேட்கிறார்.

முந்தைய சுலோகத்தில், அர்ஜுனன் உறுதியான புத்தி நிலையில் யோகிகள் அல்லது ஞானிகளின், எதிர்வினை/பதில் நடத்தை (Reaction), அவர்களுடைய உள்ளத்தின் நிலைப்பாடு மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று  கேட்டார்.

கிருஷ்ணர் பதிலளிக்கிறார்,  “எந்த வித இன்ப நுகர்வுக்கான வேட்கையும்  இல்லாது, அதன் தேவைகளில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு, – அர்ஜுனா, குறித்துக்கொள்! அவைகள் (இன்ப நுகர்வுகள்) மனதால் தோன்றுபவைகள் – அதே நேரம் ஆத்மஞானத்தால் ஆத்மாவாகவே இருந்துகொண்டு முழு திருப்தியில் இருப்பவனே ஸ்திதபிரக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்”.

இந்த சுலோகத்தில் “அவர்களுடைய உள்ளத்தின் நிலைப்பாடு” என்பது எப்படி இருக்கும் என்பதை சொல்கிறார். 

விளக்கம்:

ஆத்மா என்னும் சொல்: முன்னுரை

முதல் முறையாக கிருஷ்ணர் “ஆத்மா”, “ஆத்மன்” என்று இந்த சுலோகத்தில் குறிப்பிடுகிறார்.  ஆத்மா என்று சொன்னதுமே, நம் அனைவருக்கும் நாம் முன்னரே அறிந்தது தான் நினைவுக்கு வரும். அதாவது ஆத்ஂமா (soul) என்பது பிறவி எடுக்கிறது, உடலில் தங்குகிறது, இறக்கும் போது உடலை விட்டு வெளியேறுகிறது, நிறைவேறாத ஆசைகள் இருந்தால் அது தவிக்கும், பித்ரு கர்மங்கள் செய்யும் போது அது நம்மிடம் வரும், என்று நமக்குள் ஒரு பிம்பம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிம்பத்தை அல்லது புரிதலை தவறு என்று சொல்லவில்லை. 

ஆனால் இந்த சுலோகத்தில் ஆத்மா என்று குறிக்கப்படுவது நாம் முன்னரே புரிந்து வைத்திருக்கும் “ஆத்மா” என்ற கருத்தை அல்ல. இங்கு கிருஷ்ணர் குறிப்பிடும் “ஆத்மா”, சுலோகம் 2.12 முதல் 2.25 வரை விளக்கப்பட்டிருந்த, பரந்து விரிந்த, ஒரு வரையறைக்குள் அடக்க முடியாத  ஆத்ம ஞானம் சம்பந்தப்பட்ட “அது”. இந்த சுலோகத்திலும், இனி வரும் சுலோகங்களிலும், “ஆத்மா” என்ற வார்த்தை வரும் போது, இந்த விளக்கத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் “ஆத்மா” என்று ஏற்கனவே மனதில் கொண்ட பிம்பத்தை பிரயோகப்படுத்தினால் (applying thoughts), நாம் உண்மையான, உயர்ந்த அர்த்தத்தை இழந்து விடுவோம்.

“ஆத்மா”, “ஆத்மன்” என்று இந்த சுலோகத்தில் சொல்லி இருந்தாலும் “அதற்கென்று” ஒரு குறிப்பிட்ட பெயரோ, வடிவமோ இல்லை. இந்தக் காரணத்தினால் தான், கிருஷ்ணர், “ஆத்மா” என்று குறிப்பிடாமல் “அது” என்றே இது வரை சொல்லிக் கொண்டு வந்தார். உபநிடதங்களும் “தத்துவ மசி” (நீயே அது) என்றே சொல்லுகின்றன. “அதை” பல இடங்களில் பலவாறு குறிப்பிட்டாலும், ஆத்மன், பிரம்மன், பரப்ரம்மம், ப்ரம்மா, கிருஷ்ணா, பரம், பரம் ஜோதி, சிவம், பராசக்தி என எங்கு, எப்படித் தேவையோ அதற்கேற்றார் போல் பெயர் சொல்கிறார்கள். இந்த சுலோகம் முதல் கிருஷ்ணர், ஆத்ம ஞானிகளின் பண்பையும், “அதற்கும்” ஆத்மஞானிகளுக்குமான தொடர்பையும் விளக்குவதால், “அதை” “ஆத்மா”, “ஆத்மன்” என்று குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணர் – “இன்ப நுகர்வுகள்” – “மனதால் தோன்றுபவைகள்” –  “திருப்தி” – “ஆத்ம ஞானத்தால் ஆத்மாவாகவே” –  என்ற வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். ஒவ்வொன்றும் ஆழமான கருத்தைக் கொண்டுள்ளன.

  1. இன்ப நுகர்வுகள்:

யோகிகள், காமத்தை அதாவது இன்ப நுகர்வுகள் (pursuit of pleasure) அனைத்தையும் அறவே விட்டொழித்தவர்கள் (அனைத்திலிருந்தும் விடுபட்டவர்கள்) என்று இந்த சுலோகம் சொல்கிறது. காமம் என்றால், “ஆசைகள்” அல்லது “உடல் சம்பந்தப்பட்ட ஆசைகள்” என்று தான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அது ஒரு கெட்ட வார்த்தை அல்லது விஷயம் என்று தான் நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கு பாதைகளில் அதாவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில், காமம் என்பது இன்பத்தைக் குறிக்கிறது. 

காமம் அல்லது இன்பத்தை கொடுக்கக் கூடியவைகளை இன்ப நுகர்வு என்று சொல்கிறோம். இங்கு நாம் இன்பம் என்றால் என்ன என்பதை பார்க்க வேண்டும். இன்பம் என்று தனியாக உணர்வு இந்த உலகத்தில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக அப்படி ஒன்று இல்லை. இன்பம் என்ற உணர்வு எப்போது ஏற்படுகிறது என்று பார்ப்போம்?

  1. நமக்கு துயரம் அல்லது வேதனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் போது.
  2. பாதுகாப்பற்ற உணர்வு மறைந்து நாம் பாதுகாப்பாக உணரும் போது.
  3. ஏக்கங்கள் (craving & longing), கனவுகள் (goals), ஏமாற்றங்கள், தவிப்புகள், இழப்புகள், வெறுமைகள் சரி செய்யப்படும் போது அல்லது நிறைவேறும் போது.

சுருக்கமாக, வலியில் (Pain) இருந்து நிவாரணம் (pain relief) கிடைப்பது இன்பம் (pleasure) ஆகும். 

எடுத்துக்காட்டு:

    • தன் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நிச்சயித்த திருமணம் மண நாள் அன்று, கடைசி நிமிடத்தில் நின்று போனால், பெற்றவர்கள் தாங்க முடியாத வேதனை கொள்வார்கள். ஆனால், இன்னொரு நல்ல வாழ்க்கை அமைந்த உடன், மனதின் வலி நிவாரணம் அடைந்து இன்பம் தருகிறது.
    • காதலியைப் பிரிந்த காதலன் வேதனையில் தவிக்கிறான். அவர்கள் மீண்டும் சேரும் போது, மனதின் வலி நிவாரணம் அடைந்து இன்பம் தருகிறது.
  1. குடும்பம் என்ற அமைப்பு நமக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. அப்பா குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வேலைக்காக சென்றால், மனதின் பாதுகாப்பற்ற உணர்வு ஒரு வலியைத் தருகிறது. அப்பா மீண்டும் திரும்பி வந்து விட்டால், இழந்த பாதுகாப்பு உணர்வு நிவாரணம் அடைந்து இன்பம் தருகிறது.
    • நீண்ட நாட்கள் ஒரு பொம்மைக்காக ஒரு குழந்தை ஏங்குகிறது. அந்த பொம்மை அந்த குழந்தைக்கு கிடைக்கும் போது, ஏக்கம் என்ற மனதின் வலி நிவாரணம் அடைந்து இன்பம் தருகிறது.
    • ஒரு மாணவனுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறும் போது, அது இன்பம் தருகிறது.

2. மனதால் ஏற்படும் இன்ப நுகர்வுகள்:

சுலோகத்தில் தனியாக அர்ஜுனனுக்கு மனதால் ஆன இன்ப நுகர்வுகள் என்பதை அடிக்கோடிட்டு காண்பித்திருக்கிறார் கிருஷ்ணர். 

உடலால் வரும் வலிகள் அதாவது உடல் பராமரிப்புக்கான அடிப்படை தேவைகளை இந்த சுலோகத்தில் கிருஷ்ணர் குறிப்பிடவில்லை. எடுத்துக்காட்டாக வயிற்றின் பசி, தண்ணீர் தாகம், போன்றவை இன்ப நுகர்வுகள் ஆகாது. ஆனால் பசிக்கு உண்பது தான் இதில் அடங்கும். ருசிக்கு உண்பது உடலின் தேவை அல்ல. அது மனதின் தேவை அல்லது ஆசை.

இது தவிர மற்ற அனைத்தும் மனம் சம்பந்தப்பட்டது, அதனால் தான் கவலையை, மனக்கவலை என்கிறோம். நாம் முன்பு சொன்ன, ஆசை, ஏக்கம், கனவு, பாதுகாப்பு உணர்வு என்பனவெல்லாம் மனதுக்குத்தான். மனதிற்கு ஆதாரம் இல்லை. அதில் வரும் உணர்வுகளுக்கு எல்லையும் இல்லை, நிலையான தன்மை இல்லை. மாறிக்கொண்டே தான் இருக்கும். மனதின் தேவைகளின் அளவுகள் கூடும், குறையும். துன்பத்தை போக்கும் (வலிகளை நிவாரணம் செய்யும்) இன்ப நுகர்வுகளை இடையறாது துரத்திக்கொண்டே சலித்துக் களைத்துப் போகிறோம்.

இசை கேட்பது, விலை உயர்ந்த ஆடைகள் அணிவது, பெரிய விழாக்களில் கலந்து கொண்டு கொண்டாடுவது என அனைத்தும் மனதால் ஏற்படும் இன்ப நுகர்வுகளே. இசை கேட்பது எனக்கு இன்பத்தை மட்டும் தானே தருகிறது. நான் ஏன் அதை விடவேண்டும் என்ற கேள்வி எழலாம். ஒரு குறிப்பிட்ட பாடல் கேட்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழும் அந்த தருணம், மனதில் ஒரு சமிக்ஞை-signal உண்டாகிறது. இது மனதின் வலியின் ஆரம்பம். இதன் பிறகு ஏற்படும் ஒவ்வொரு நொடி தாமதமும், ஒரு அதிர்வலை, பதட்டம், மன அழுத்தத்தை உண்டு பண்ணும். மிக நுண்ணிய அளவில் நம் மனதில் ஏற்படும் இந்த மாற்றத்தை நாம் உணர்வதில்லை. சில நிமிடங்கள் கழித்து அந்த பாடல் கேட்கும் போது, அந்த பாடலுக்கு ஏற்ப மனதின் நிலை பெரிய மாற்றங்களுக்கு உட்படும். இசையில் நம்மை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் போது, யாராவது பாட்டை நிறுத்தினால், அப்போது வரும் கோபம் சொல்லும், நம் மனம் எவ்வளவு சலனத்தில் (disturbed) இருக்கிறது என்று! பாட்டைக் கேட்டு முடிக்கும் அந்த தருணம், மனம் வலி நிவாரணியை அடையும். அதன் பிறகு, ஒரு அமைதியான நிறைவு நிலையை அடையும் -அடுத்த ஒரு வலி தோன்றும் வரை. இந்த நிறைவு நிலையே திருப்தி. இந்த ஒட்டு மொத்த செயல்முறையில்(process) ஒன்றை மறந்து விடுகிறோம். மனதில் வலி உண்டாகி, பல அதிர்வுகளை மனம் மேற்கொண்டு, வலி நிவாரணம் ஆகி பிறகு மனம் அமைதி அடைகிறது. ஆனால் இது அனைத்தும் நடக்கும் முன்பும் நம் மனம் சலனமற்ற அமைதி நிலையில் தான் இருந்தது. இசை கேட்பதை, இன்ப நுகர்வு (pleasure)  என நினைத்துக்கொண்டு, சோப்பு நுரையில் நாமே ஊதி, நாமே உடைக்கும் காற்றுக் குமிழ் போல, ஆயிரம் ஆயிரம் வலிகளை உண்டு பண்ணி, நிவாரணம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஞானிகள், இது போன்ற மனதால் ஏற்படும் துன்பம், அதை நிவர்த்தி செய்யும் இன்ப நுகர்வு பொருள்கள், அவைகளை தேடி போவது போன்ற எல்லாவிதமான கருத்துக்களிலும் (concepts) இருந்தே விடுபட்டு இருக்கிறார்கள்.  வலி, அதைத் தொடர்ந்து வரும் நிவாரணம் போன்ற எதுவும் உண்மை இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். அதே நேரத்தில், எந்த முயற்சியும் இல்லாமல், நிரந்தர திருப்தியைத் தருவது எது என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

இதை நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், நாம் இப்போது கற்றுக்கொள்வதை, புரிந்து, பகுத்தாய்ந்து, அந்த புத்தியை வாழ்வில் பிரயோகப்படுத்துதல் அவசியம். இந்த புரிதல்கள் நமக்கு, ஆழமாக வேரூன்றும் பொழுது தானாகாவே மனதால் ஏற்படும் வலியும் ஏக்கங்களும் இருக்காது, அதை நிவாரணம் செய்யக்கூடிய வஸ்துக்களான இன்ப நுகர்வு பொருள்களை தேடி போக வேண்டியதும் இல்லை.

3. திருப்தி:

திருப்தி என்பது நிறைவு. அதற்கு மேல் நம்மால் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாத அல்லது தேவையில்லாத ஒரு நிலை.  எடுத்துக்காட்டாக, விருந்தில் திருப்தியாக (கழுத்து வரை) உணவு உண்ட ஒருவருக்கு, நாம் மிக சிறந்த இனிப்புகள் கொடுத்தாலும், விலை உயர்ந்த உணவு வகைகள் கொடுத்தாலும், அவற்றின் தேவைகள் இருப்பதில்லை. 

மனதால் ஏற்படும் இன்பங்கள் திருப்தியை தருமா? அது நிலையானதா? இல்லையென்றால் எது வரை நிலைக்கும் அல்லது நீடிக்கும். 

  1. “மனதால் வரும் ஆசைகள் நிறைவேறிய பின்”, திருப்தி ஆகி விட்டது என்ற நிலை இல்லை. அப்படி திருப்தி ஆனது போல் தோன்றினாலும், அந்த ஆசை உள்ளே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அது மீண்டும் தோன்றும். எனவே இது ஒரு முடிவற்ற சுழல். எடுத்துக்காட்டாக, நாம் இது வரை பல ஆயிரக்கணக்கான பாடல்கள் கேட்டு இருக்கிறோம். இன்னும் கேட்கப் போகிறோம். பாடல் கேட்பது நிரந்தர திருப்தியை தருமேயானால், நாம் ஒரு பாட்டு கேட்பதுடன் நிறுத்திக் கொள்வோம்.
  1. ஒரு வேளை, அந்த ஆசை நிறைவேறாவிட்டால் (வலி), அந்த வெறுமையை நிரப்ப, நாம் வேறொரு தேவையை தேடுகிறோம். அதாவது மனதின் வலியை உருவாக்குகிறோம். எடுத்துக்காட்டாக, கார் வாங்க ஆசைப்பட்டு முடியாவிட்டால், இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று அடுத்த தேவையை உருவாக்கிக் கொள்கிறோம். இது ஒரு தொடர் சங்கிலி போல போய்க்கொண்டே இருக்கும்.

மனதால் ஏற்படும் இன்பங்கள், அதனால் கிடைக்கும் திருப்தி தற்காலிகமானது; இன்பம் தந்த ஒரு பொருளே துன்பமாக மாறலாம். அல்லது வேறு ஒரு புதிய தேவை பிறக்கலாம். இன்ப நுகர்வுகளின் தேவைகள் என்றும் முடியாத சங்கிலி போல், விரிவடைந்துக் கொண்டே போகிறது. 

திருப்தி என்பது நமக்கு சாத்தியப்படாததால் தான் இன்று நாம் 500 வருடங்களுக்கு முந்தி இருந்தவர்களை விட, வசதி, வாய்ப்பு, இன்ப நுகர்வு பொருட்கள், பாதுகாப்பு என்று இருந்தும் அந்த அதிருப்தி அல்லது குறைவான திருப்தி – வெறுமை (emptiness), அதிகரித்த ஒரு சூழலில் இருக்கிறோம்.

4. ஸ்திதபிரக்ஞன் – திருப்தி நிலை

ஆத்மஞானத்தால் ஆத்மாவாகவே இருந்துகொண்டு முழு திருப்தியில் இருப்பவன் ஸ்திதபிரக்ஞன். ஸ்திதபிரக்ஞனுக்கு இரண்டு வகைகளில் திருப்தி (நிறைவு) கிடைக்கிறது என்கிறார் கிருஷ்ணர்.

1. மனதால் கற்பனை செய்து கொள்ளும் வலி, பின் அந்த வலியை நிவர்த்தி செய்ய நாம் எடுக்கும் இன்ப நுகர்வு முயற்சிகள், அந்த வலி நிவாரணம் ஆனவுடன் ஏற்படும் சமநிலை – அமைதி – திருப்தி. அதாவது அமைதியாக இருக்கும் குளத்தில் கல் எறிந்து, சலனப்படுத்திய பின், மீண்டும் அமைதி ஆவது. அந்த அமைதியே திருப்தி. திருப்தி எப்பொழுது வரும் என்றால் வலி-நிவாரணம் ஆகும் போது அல்லது துன்பம்-இன்பம் இல்லாத நிலையில் இருக்கும் பொழுது. 

வலி மற்றும் அதனை தொடர்ந்து வரும் இன்பத்தில் பற்று, அதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அவைகளை கைவிட வேண்டும் என்ற நிலை இவற்றை எல்லாம் தாண்டி, அது போன்ற எண்ணங்களோ அல்லது கருத்துக்களோ முழுவதுமாக இல்லாத நிலையில் இருக்கும் ஸ்திதபிரக்ஞனுக்கு அங்கு இருப்பது என்னவென்றால் சம நிலை – அமைதி – திருப்தி மட்டும் தான். அது நிலையானது, குறைவில்லாதது. அவர்கள் மனம் என்ற குளம், கல் எறியப்படாமல், 24 x 7 அமைதி அல்லது திருப்தியில் இருக்கும்.

2. அதே நேரம் ஆத்மஞானத்தின் புரிதல் மற்றும் உணர்வுகளோடு ஆத்மாவாகவே இருக்கும் பொழுது வலி என்பதற்கோ, வெறுமைக்கோ  (emptiness) அங்கு இடமில்லை. அது நிறைந்த, நிறைவான பூர்ணத்துவமான நிலை. அங்கு அதற்கு அயலாக எதுவும் இல்லாத நிலை. 2.17 – இல் இங்கு இருக்கும் சர்வத்தையும் எது வியாபித்திருக்கிறதோ, “அது” என்று கிருஷ்ணர் கூறினார்.  2.16 – இல், இந்த உலகில் இருக்கும் அனைத்தும் தற்காலிகமானவை என்றும், 2.18 – இல், “அது” மட்டுமே மாறுதலில்லாதது என்றும் கூறினார். 

  • அப்படிப்பட்ட பூர்ணத்துவத்தை  நிரப்ப முடியாது.  சிறிது குறைவாக அல்லது சிறிது இடம்/இடைவெளி இருக்கும் ஒன்றைத் தானே நிரப்ப முடியும்? 
  • “அதுவாக” இருக்கும் ஞானிக்கு, அந்த பூர்ணத்துவத்தில் அனைத்தும் அடங்கி இருப்பதால், அந்த பூர்ணத்துவத்தில் இல்லாத, அல்லது புது வகையாக அதை நிரப்பக்கூடிய வஸஂது ஒன்று எப்படி இருக்க முடியும்?. 

அந்த பூர்ணத்துவமே திருப்தியான 24 x 7 நிலை. ஆத்மஞானியாக இல்லாத நம்மால் இந்த 2-வது நிலையை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்பதால், கிருஷ்ணர் 1- வது நிலை அதாவது நமது அன்றாட வாழ்வியலை வைத்து நமக்கு ஸ்திதப்பிரக்ஞனின் நிலையை விளக்குகிறார்.

எவ்வளவு அருமையாக விளக்கப்பட்டுள்ளது! எந்த வகையில் பார்த்தாலும் இன்ப நுகர்வில் எஞ்சி இருப்பது வலி மட்டுமே; அதற்கு மாறானது, இன்ப நுகர்வும்-வலியும் இல்லாத பூர்ணமான திருப்தி நிலை. அதுவே ஆத்மஞானியின் நிலை.

முந்தைய சுலோகத்தில், “மனதில் தோன்றும் இன்ப நுகர்வுகளின் எல்லாவிதமான தேவைகளில் இருந்தும் விடுபட்டு, ஆத்மாவில் ஆத்மாவாகவே இருக்கும் ஸ்திதப்பிரக்ஞன் எப்போதும் திருப்தி நிறைந்து இருக்கிறான்.” என்று கூறிய கிருஷ்ணர், இந்த சுலோகத்தில் இந்த உலகத்தின் தூண்டுதலுக்கு ஞானிகளின் எதிர்வினை அல்லது பதில் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று விவரிக்கிறார். 

கிருஷ்ணர் தொடர்கிறார், “ துக்கங்களால் ஏற்படும் மனக்கலக்கங்கள் இல்லாதவனும், சுகங்களுக்கான இன்ப நுகர்வை தேடிப் போக வேண்டிய எந்த முகாந்திரமும் இல்லாதவனும், உணர்வுகளைத் தூண்டக்கூடிய வஸ்துக்களில் இருந்து விருப்பு-வெறுப்பு, பயம், கோபம் போன்ற உணர்வுகள் தோன்றாமல் விடுபட்டு உறுதியான புத்தியில் நிலைத்து இருக்கும் ஸ்திதப்பிரக்ஞன்  ‘முனி’ என்றும் அழைக்கப்படுகிறான்.”

விளக்கம்:

துக்கத்தில் மன கலக்கம்:  முந்தைய ஸ்லோகத்தில் வலிதான் இன்ப நுகர்வுக்கு காரணி என்று சொன்ன கிருஷ்ணர் அதன் தொடர்ச்சியாக அந்த வலிகள் எங்கிருந்து தோன்றுகின்றன, அந்த வலிகள் நம்முள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கு விவரிக்கிறார். ஒரு துன்பம் அல்லது துயரம் வரும் போது, நம்மில் பல வித உணர்வுகள் பொங்கும் (surge of emotions).  அதுவே மன கலக்கம். எடுத்துக்காட்டாக, தன் மாத வருமானத்தை மட்டுமே சார்ந்து குடும்பத்தை பராமரிக்கும் ஒருவர், அலுவலத்தில் பணி நீக்கம் செய்யப்படும் போது, எதிர்பாராத நிலையில் வேலை இழந்ததால் அதிர்ச்சி, ஏமாற்றம், குடும்ப செலவுகள் பற்றி கவலை, எதிர்காலத்தை பற்றிய பதட்டம், அலுவலக நிர்வாகத்திடம் அல்லது சூழ்நிலையின் மீது கோபம், கடினமாக வேலை செய்தும் இவ்வாறு நடந்ததால் வெறுப்பு, விரக்தி, மனசோர்வு, புதிய வேலை கிடைக்குமா என்று பயம், தன் திறமை குறித்து சுயமதிப்பு குறைவீடு (Low self-esteem) என பலவித உணர்கவுகள் பொங்கும். இது போன்ற துன்பமான/துயரமான சூழ்நிலையில் நமக்கு ஏற்படும் மனக்கலக்கம் ஞானிகளுக்கு இருப்பதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட  சூழ்நிலைகளின் தாக்கம் அவர்களுக்கு வலியையோ அல்லது துக்கத்தையோ உண்டு பண்ணாது.

சுகத்துக்கு முகாந்திரமே இல்லை: முந்தைய சுலோகத்தில் கூறியது போல, இன்ப நுகர்வுகள் மனதால் தோன்றுபவை. எந்த ஆதாரமும் அற்ற மனதில் தோன்றும், நாமே தேடி உருவாக்கிக் கொள்ளும் வலிகள், வலி நிவாரணம், அது ஏற்படும் போது கிடைக்கும் தற்காலிக இன்பம், அதற்கான தேவைகள் எதுவும் ஞானிகளுக்கு இல்லாததால், இன்ப நுகர்வுக்கான பாதைகளே அவர்களுக்கு இல்லை.

வலிகள் அதாவது ஆசைகள் என்ற காரணமே (Cause) இல்லாத போது, இன்ப நுகர்வு என்ற விளைவு (effect) அவர்களுக்கு அர்த்தமற்று போகிறது.

வெளி உலகத் தொடர்புகளினால் மனக்கலக்கம் 3 வழிகளில் (source) ஏற்படுகிறது.

  1. பொருள் சார்ந்த விஷயங்களில் ஏற்படும் விருப்பு, வெறுப்பு (சமஸ்கிருதத்தில் ராக-துவேஷ எனப்படுகிறது). 
  2. பயம்
  3. கோபம் 

வழி-1 →  விருப்பு, வெறுப்பு: 

ராக என்ற சொல்லின் மூலச்சொல், ரங்க். அதாவது பல வண்ணங்கள் – நம் கண்களுக்கு இன்பம் தரும் வண்ணங்கள். ராகம் என்றால் நம்மில் பல உணர்வுகளைத் தூண்டும் ஒலி அதாவது இசை. இந்த சுலோகத்தில் ராக என்ற சொல், நம்மில் பல உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை ஈர்க்கும் அல்லது நம் விருப்பத்தைத் தூண்டும் பொருள்களைக் குறிக்கிறது. ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போல, ராக (விருப்பு) இருந்தால், துவேஷ (வெறுப்பு) என்பது தவிர்க்க முடியாதது. இந்த விருப்பு/வெறுப்பை தருவது, மண், பொன், பெண்/ஆண் ஆசைகள். நாம் ஆசைப்படும் பட்டம், பதவி, பணம், பரிசு, வீடு, வாகனம், ஆடம்பர உடைகள், நகைகள், ஆண்/பெண் இனக்கவர்ச்சி, அதிகாரம், சில குறிப்பிட்ட பொருள்களின் மேல் உண்டாகும் ஈடுபாடு இவை அத்தனையும் இதில் அடங்கும். பொருள் சார்ந்த பயமும், கோபமும் இந்த ராக/துவேஷ வகையே.

இந்த வெளி உலகத் தொடர்பினால், பொருள் சார்ந்த விஷயங்களில் நமக்கு உண்டாகும் விருப்பு/வெறுப்பு, பயம், கோபம் மனக்கலக்கத்தை தந்து, நம்மை துக்கத்தில் கொண்டு சேர்க்கிறது. 

வெளி உலகத் தொடர்பு → பொருள் சார்ந்த விஷயங்களில் ஏற்படும் விருப்பு, வெறுப்பு, பயம், கோபம் → மனக்கலக்கம் → துக்கம்.

இது எந்த வித மனக்கலக்கத்தை தரும் என்றால் ஏமாற்றம், பதட்டம், ஏக்கம், விரக்தி, சுய பச்சாதாபம், அருவருப்பு, மனக்கசப்பு போன்றவை ஆகும்.

எடுத்துக்காட்டாக, நாம் ஒரு பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு உழைக்கும் போது, பதட்டம், கவலை ஏற்படுகிறது. அது வேறு ஒருவருக்கு தரப்பட்டால், நமக்கு ஏமாற்றம், விரக்தி, மனக்கசப்பு ஏற்படுகிறது. மேலாளர் மேல் கோபம் ஏற்படுகிறது. அந்த பதவி உயர்வு நமக்கே கிடைத்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் ஏற்படுகிறது. 

நீண்ட நாட்களாக நாம் பார்த்து ஆசைப்பட்ட ஒரு விலை உயர்ந்த நகையை, அதை வாங்க குடும்பத்தின் சூழ்நிலை ஒத்துழைக்காத போது, அது நமக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயம் வருகிறது. நமக்கு வாங்கப்பட்ட நகையை, குடும்பத்தில் இருக்கும் இன்னொருவர் – வேண்டும் என்றே நமக்கு கிடைக்காமல் செய்ய முயற்சி செய்யும் போது கோபம் வருகிறது. இரண்டுமே மனக்கலக்கத்தை உண்டு செய்து துக்கத்தில் நம்மை சேர்க்கும்.

வழி-2 → பயம்:

பயம் என்பது பொதுவாக நம் உயிருக்கும், உடலுக்கும் வரும் ஆபத்தினால் தோன்றும் பயம் அதாவது மரண பயம். வழி-1 இல் சொன்ன பயம் உலகப் பொருட்கள் சார்ந்த பயம். இங்கு சொல்லப்படுவது உயிர், உடல் மற்றும் வாழ்வின் நிலை சார்ந்த பயம்.

  1. நமக்கு நோய் வரும் போது செயலிழந்து போய் விடுவோம், வலி தாங்க முடியாது அல்லது இறந்து விடுவோம் என்ற பயம். ஒருவருக்கு கேன்சர் வந்தால், அது தரும் வலி, சிகிச்சை முறை, எந்த நிலையில் நோய் இருக்கிறது, இனி எவ்வளவு நாள் உயிருடன் இருப்போம் என நினைத்து ஒருவருக்கு பயம் வரும். கோவிட் பரவிய போது ஏற்பட்ட பயம் இந்த வகையே.
  1. யாராவது நம்மைத் தாக்க வந்தாலோ, விலங்குகள் அல்லது இயற்கை சீற்றங்களினால் ஆபத்து நேரிடும் போது ஏற்படும் பயம். எடுத்துக்காட்டு: பாம்பை பார்க்கும் போது ஏற்படும் பயம், புயல், பூகம்பத்தினால் உண்டாகும் பயம், திருடர்கள் தாக்க நேர்ந்தால் வரும் பயம் அல்லது போர்க்காலங்களில் ஏற்படும் பயம்.
  1. நம் வாழ்வின் நிலைக்கு (Existential threat) ஒரு ஆபத்து வரும் போது ஏற்படும் பயம். இது பொதுவாக ஒருவருடன் நாமே நம்மை ஒப்பிட்டு கொள்வதால் ஏற்படும் பயம். நம்மை விட ஒருவர் அதிகமாக மதிப்பெண் வாங்கினால் வகுப்பில் நம் நிலை தாழ்ந்து போய் விடும் என்று பயம்.  நம்மை விட திறமையான ஒருவர் நம் அலுவலக அணியில் சேர்ந்தால், நம் பதவி உயர்வு பாதிக்கப்படும் அல்லது நம் வேலை பறிபோகும் என்று பயம். கணவர் இன்னொரு பெண் மேல் ஈடுபாடு கொண்டால், தன் வாழ்க்கை பறிபோகும் என்று பயம். இரு பெண்களின் சிறந்த தோழமையில், மூன்றாவதாக ஒரு பெண் சேர்ந்து, இருவரில் ஒருவர் பாதிக்கப்படும் போது, நட்பை இழந்து விடுவோம் என்று பயம். நம் குழந்தை, பெரியம்மாவையோ அல்லது அத்தையையோ “அம்மா” என்று அழைத்தால், தன் அன்பை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பயம். 

மற்ற இரண்டை விட, இந்த மூன்றாவது பயம், நாம் கற்பனையில் கூட நினைக்க முடியாத அளவு, நம்மை செயல்பட வைக்கிறது. இன்று உள்ள பெருவாரியான மன நோய்கள் (anxiety, nervousness, unrest, panic attack, etc.), இந்த பயத்தால் உண்டாகக் கூடியவைகள் தான்.

வழி-3 → கோபம்:

வழிகள் 1 மற்றும் 2 தனிப்பட்ட முறையில், நேரடியாக நம்மை பாதிக்கும் விஷயங்களால் வருபவை. நம்மால் பார்க்க அல்லது உணர முடியும். ஆனால் கோபத்தை உண்டு பண்ணும் காரணங்கள் வெளிப்படையாக தெரிவதில்லை. ஏனென்றால், பல விஷயங்கள் நம்மை மறைமுகமாக பாதுகாக்கும் (indirect safety) என்று நாம் நம்புகிறோம். இதில் நமது மதிப்பு, தன்மானம், சமுதாய ஒழுக்கம் போன்றவை அடங்கும். இவை நமது நிலைத்தன்மைக்கு (existential stability) உத்தரவாதமும், பாதுகாப்பும் கொடுக்கும் என்பது நம் நம்பிக்கை.

கோபம் எப்போது வரும்? 

  1. நம் மதிப்புக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுது.
  2. சமுதாய ஒழுக்கங்களான நீதிக்கும், நியாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுது.
  3. தனிப்பட்ட முறையில் நாம் இது வாழ்க்கையின் நல்லதுக்கும், பாதுகாப்புக்கும் உகந்தது அல்லது சரி என்று நினைப்பதற்கு மாறாக பிறர் நடக்கும் பொழுது. நாமே அப்படி நடக்க நேரிட்டாலும் கோபம் வரும்.

எடுத்துக்காட்டுக்கள்:

  1. மான, அவமானம்: மதிப்பு என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு பாதுகாப்பு வளையம். அந்த பாதுகாப்பு வளையம் பாதிக்கப்படும் போது நமக்கு கோபம் வருகிறது.
    1. ஒரு நெருங்கிய உறவினர், அவரின் மகன்/மகள் திருமணத்திற்கு நம்மை அழைக்காமல் விட்டு விட்டால், அதை ஒரு அவமானம் என்று கருதி கோபப்படுகிறோம். 
    2. வகுப்பில் பலர் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில், ஆசிரியர் தன்னை மட்டும் குறிப்பிட்டு “நீ ஏன் மதிப்பெண் குறைவாக வாங்கினாய்” என்று கேட்கும் போது, அந்த ஆசிரியர் நம்மை தனிப்பட்டு அவமானப்படுத்தியதாக எண்ணி கோபம் வருகிறது.
  2. அநீதி/அநியாயம்: அநியாயம் நமக்கு நடந்தாலும், நம்மை சேர்ந்தவர்களுக்கு நடந்தாலும் அல்லது இந்த சமுதாயத்திற்கு நடந்தாலும் நமக்கு கோபம் வருகிறது.
    1. நாம் வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் போது, சட்டென்று ஒருவர் இடையில் புகுந்தால் நமக்கு கோபம் வருகிறது.
    2. ஒரு சிறு குழந்தையை ஒருவன் பாலியல் கொடுமை செய்யும் போது நமக்கு கோபம் வருகிறது.
    3. சாலை விதிகளை மற்றவர் மீறும் போது நமக்கு கோபம் வருகிறது.
    4. நம் மகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பரிசு, ஒருவரின் செல்வாக்கால், வேறொரு குழந்தைக்கு கிடைக்கும் போது நமக்கு கோபம் வருகிறது.
  1. சரி/தவறு என்று நாம் தீர்மானம் செய்த விஷயங்கள்:
    1. சிக்கனமாக வாழ்வதே சரி என்று பெற்றோர் நினைக்கும் போது, மகள் ஆடம்பர செலவுகள் செய்யும் போது பெற்றோருக்கு கோபம் வரும்.
    2. கல்லூரியில் படிக்கும் பிள்ளை வகுப்புகள் முடிந்த உடன் வீடு திரும்ப வேண்டும் என்று அப்பா நினைக்கிறார். ஆனால் மகன் ஊர் சுற்றி விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தால், அப்பாவுக்கு கோபம் வரும்.
    3. மது குடிப்பது தவறு என்று மனைவி நினைக்கிறார். கணவன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தால், மனைவிக்கு கோபம் வரும்.
    4. கால தாமதமாக வருவது தவறு என்று நினைக்கும் ஆசிரியர் வகுப்புக்கு, மாணவன் தாமதமாக வந்தால், ஆசிரியருக்கு கோபம் வரும்.

இதன் மூலம் ஆபத்தில் இருக்கும் ஒருவரை காப்பாற்றக் கூடாது என்றோ அல்லது அநீதியையும், அநியாயத்தையும் தட்டிக் கேட்கக்கூடாது என்றோ அர்த்தம் இல்லை. சுலோகம்-2.31 இல் கூறியது போல, சூழ்நிலைக்கேற்ற நியாய தர்மங்களை அனுசரித்து கடமைகளை செய்யும் பொழுது விருப்பு, வெறுப்பு, பாதுகாப்பு உணர்வு காரணமாக உணர்ச்சி மேலிடும்.  அப்போது கோபம், ஆத்திரம், வஞ்சம், பரிதாபம், இரக்கம் போன்ற எதிர்வினைகளோ அதனால் ஏற்படும் மனக்கலக்கங்களோ இல்லாது நடுநிலையில் இரு என்று தான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருந்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்துக் கொண்டு வருகிறார்.

எதிர்வினை (reaction):

துன்பத்தில் தோன்றும் மனக்கலக்கம் என்ற எதிர்வினை ஸ்திதப்பிரக்ஞனிடம்  இருப்பதில்லை.

நாம் ஏற்கனவே கூறியதுபோல், துன்பத்தில் மனக்கலக்கம் அடைவதற்கு அடிப்படை காரணங்களாக இருப்பது,

  1. விருப்பு, வெறுப்பு
  2. பயம்
  3. கோபம் 

விருப்பு, வெறுப்பு தோன்றும் சூழ்நிலைகளில், எப்படி ஞானிகள், எந்த அசைவும், சலனமும் இல்லாமல் இருக்கிறார்கள். விருப்பு, வெறுப்பு தோன்றுவதற்கு மூல காரணம், நம் புலன்கள் வெளி உலகுடன் தொடர்பு கொள்வதால் தான். இந்த புலன்கள் மற்றும் புலன் அடக்கம் பற்றி, அடுத்து வரும் சுலோகங்களில் கிருஷ்ணர் கூறுகிறார். சுருக்கமாக, எந்த ஒரு இன்ப நுகர்வு முயற்சியும் வலியில் தான் போய் முடியும் என்று (சுலோகம் 2.55) ஞானிகள் உணர்ந்துள்ளதால் அவர்கள் எதன் மீதும் விருப்பம் கொள்வதில்லை.

மரண பயம் – சுலோகம் 2.20 இல் “நாம் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை;” சுலோகம் 2.22 இல் “பழைய நைந்து போன உடைகள் விடுவிக்கப்படுவது போலவே, இந்த பழைய தேய்ந்து போன உடல்கள் விடுவிக்கப்பட்டு, வேறு புது உடல்கள் “அதனுடன்”, சேர்ந்து கொள்கின்றன” என்று கிருஷ்ணர் கூறினார். இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால் ஞானிகளுக்கு மரண பயம் இருப்பதில்லை.

மான, அவமானத்தால் வரும் கோபம் – மான, அவமானம் ஏற்படுவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையால் தான். நாம் சிறுமையாக உணரும் போது மட்டும் தான் அடுத்தவர்கள் செய்யும் அவமானங்களும், பரிகாசங்களும் நம்மை பாதிக்கும். 

சம நிலையில் இருக்கும் ஞானிகளுக்கு ஏற்ற, தாழ்வுகள் இருப்பதில்லை. அவர்கள் எங்கும் நிறைந்த ஆத்மா (ஏகம் – ஒன்று) என்பதால், பிரிவினைகள்  (division) என்பது இல்லை. பரப்ரம்ம நிலையில் இருக்கும் ஞானிகளுக்கு தாழ்வு/உயர்வு  என்ற எண்ணங்கள் வருவதில்லை. எனவே அவமானங்கள் அவர்களை  பாதிப்பது இல்லை.

உட்கருத்து:

இந்த சுலோகத்தில் இருக்கும் முக்கிய நோக்கத்தை நாம் விட்டு விடக் கூடாது. ஞானிகளுக்கென்ன – அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களுக்கு அது சாத்தியம். நம்மால் முடியாது என்று தட்டி விட்டு செல்வதற்கில்லை. பகுத்தாய்ந்த அறிவை பிரயோகப்படுத்துவதன் மூலம், நாம் முயற்சி செய்து கொண்டே இருந்தால், அது அனிச்சை செயலாக மாறும். இங்கு ஞானிகளைப் பற்றி சொல்வதை விட அவர்களை ஒரு முன்மாதிரியாக வைத்து, நாம் அந்த முன்மாதிரியை நோக்கி செல்ல எப்படி முயற்சியும், பயிற்சியும் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கத்தான் கிருஷ்ணர் இப்படி விவரித்துக் கூறுகிறார்.

இந்த சுலோகத்தில் “முனி” என்ற பெயரை கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். முனி அல்லது முனிவன் என்றால், காவி உடையும், நீண்ட ஜடா முடியும், கையில் கமண்டலமும், தண்டமும் வைத்திருப்பவர்கள் அல்ல. உயர்ந்த புத்தியில் ஸ்திரமாக நிலைத்து இருக்கும் ஸ்திதப்பிரக்ஞனே, முனி என்றும் அழைக்கப்படுகிறார். அவருடைய அங்க அடையாளங்களும், கந்தல் உடையும், காவி புடவையும், உடைமைகளும், இலக்கணம் அல்ல; அசைவற்ற கலங்காத நிலையான புத்தி உடையவர் எவரும் முனிவரே என்கிறார் கிருஷ்ணர்.

முந்தைய சுலோகத்தில், “ துக்கங்களால் மனக்கலக்கம் அடையாதவனும், சுகங்களுக்கான இன்ப நுகர்வுக்கான தேவையே இல்லாதவனும், உலக வஸ்துக்களின் எதிர் வினையாகத் (response) தோன்றும் விருப்பு-வெறுப்பு, பயம், கோபம் போன்ற உணர்வுகளில் இருந்து விடுபட்டு இருக்கும் ஸ்திதப்பிரக்ஞன்  ‘முனி’ என்றும் அழைக்கப்படுகிறான்.” என்று கூறிய கிருஷ்ணர்,

கிருஷ்ணர் தொடர்கிறார், “எந்த விதமான சூழ்நிலையிலும் பாசப்பிணைப்புகள் அற்றவனாக இருந்து, காரியங்கள் அனைத்தும், பிரபஞ்சத்தின் நியதிப்படி அந்த அந்த சூழ்நிலைக்கேற்ப நிகழ்ந்து கொண்டிருக்க, நல்லது நடந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மகிழ்வதும், கெட்டது நடந்தால் அதை செய்தவரை வெறுப்பதும் இல்லாமல் இருக்கக்கூடிய உயர்ந்த ஞானம், உறுதியான தெளிவான புரிதலால் நிலைநிறுத்தப்பட்டது.”

விளக்கம்:

முந்தைய சுலோகத்தில், உலகத்தில் உள்ள உணர்வுகளைத் தூண்டக்கூடிய  வஸ்துக்கள் எதுவும் ஞானிகளிடம் எந்த வித எதிர்வினை தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று கூறிய கிருஷ்ணர், இந்த சுலோகத்தில் பாசப் பிணைப்பு என்ற மாய வலையிலும் அவர்கள் அகப்பட்டுக்கொள்வதில்லை என்று கூறுகிறார். 

நம் ஒவ்வொருவருக்கும், யாரோ ஒருவருடன் – தாயோ, தந்தையோ, மகனோ, மகளோ, வாழ்க்கைத் துணையோ, உடன் பிறப்போ, நண்பர்களோ – இப்படி ஒரு உறவுடன் நீங்காத ஒரு மனப்பற்று அதாவது பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. அது மரணம் வரை நம்மைத் தொடர்கிறது. பாசப் பிணைப்பு என்பது நம் விரலுடன் ஒட்டி இருக்கும் நகம் போன்றது. ஞானிகளால் எப்படி அப்படிப்பட்ட ஒட்டுதல் இல்லாமல் இருக்க முடிகிறது? 

ஒருவர் மேல் பாசமும் வெறுப்பும் நமக்கு எப்போது எப்படி ஏற்படுகிறது. ஒருவரின் செயல்கள் நமக்கு நன்மை தருவதாக, அனுசரணையாக, அனுகூலமாக, பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது போல இருந்தால் நமக்கு பாசம் அல்லது அன்பு உண்டாகிறது. அதற்கு எதிர்மறையாக ஒருவர் நடந்து கொண்டால், நமக்கு கோபம் அல்லது வெறுப்பு உண்டாகிறது.

எந்த ஒரு உறவிடமும் அல்லது நாம் சந்திக்கும் மனிதரிடமும் நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 

  1. அந்த உறவு/நபர் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் நடந்து கொண்டால் நமக்கு மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களிடம் நாம் அன்பு செலுத்துவோம்.
  2. அந்த உறவு நம் எதிர்பார்ப்பை விட அதிகமாக கொடுத்தால், அதீத காதலோ, பாசமோ உண்டாகிறது. 
  3. நம் எதிர்பார்ப்பை விட குறைவாக நடந்து கொண்டால், மனக்குறை உண்டாகிறது. 
  4. நம் எதிர்பார்ப்பை விட முற்றிலும் மாறுபட்டு நடந்து கொண்டால், அதை ஒரு பெரிய குற்றமாகக் கருதி அவர்களை வெறுத்து ஒதுக்குகிறோம்.

எடுத்துக்காட்டாக, 

  1. மகன் வகுப்பில் முதல் மார்க் வாங்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கின்றனர். மகன் கவனம் சிதறாமல் படித்து ஒவ்வொரு தேர்விலும் முதல் மதிப்பெண் வாங்கினால், பெற்றோருக்கு மனநிறைவாக இருக்கும். மகன் மேல் மிகுந்த அன்பு செலுத்துவர்.
  2. தான் கேட்காமலே தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, எல்லா வகையிலும் எந்த குறையும் இல்லாமல், பெற்றோர் தன் மேல் செலுத்திய அன்பை விட, கணவன் மனைவி மீது அன்பு செலுத்தினால், கணவன் மீது மனைவிக்கு அதீத காதல் உண்டாகிறது.
  3. அ) கணக்கில் 100 மதிப்பெண் வாங்கிக் கொண்டிருந்த மகன், இரண்டு மார்க் குறைவாக பெற்று 98 வாங்கினால், அது ஒரு மனக்குறையாகத் தான் இருக்குமே தவிர மகிழ்ச்சியைத் தராது.

ஆ) ஒரு திருமண விழாவுக்கு, நெருங்கிய உறவினர் நம்மை அந்த திருமணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாம் இருக்கும் போது, அந்த உறவினர், நம்மை முகூர்த்த விழாவுக்கு மட்டும் அழைத்தால், நாம் ஒரு மனக்குறையோடு தான் அந்த விழாவில் கலந்து கொள்வோம்.

  1. செல்லமாக வளர்த்த மகளுக்கு பெற்றோர் வரன் பார்க்கின்றனர். அந்த மகள் பெற்றோரை எதிர்த்து வேறு இனத்தை அல்லது மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அந்த மகளை வெறுத்து ஒதுக்கி, பெற்றோர் அந்த மகளை கொலை செய்யவும் துணிகின்றனர்.

நாமும் (I / Me) இன்னொரு ஆணோ/பெண்ணோ (second person) சம்பந்தப்பட்ட உறவில், இந்த பாசமும், வெறுப்பும் மாறிக்கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு நிகழ்வுகள் நடக்கும் போதும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, நாமும், சம்பந்தப்பட்ட அந்த நபரும் இருக்கிறோம்.

சம்பந்தப்பட்ட அந்த நபர் செய்யும் ஒவ்வொரு காரியமும் அல்லது செயலும், பிரபஞ்சத்தின் நியதிப்படி மட்டும் தான் நடக்கிறது. இதற்கான மாதிரி (Model) தான் டாமினோ அல்லது ரூப் கோல்ட்பெர்க் இயந்திரம் (Domino or Rube Goldberg machine). ஒரு பந்தை தட்டி விட, அது அடுத்தடுத்த ஆயிரக்கணக்கான நிகழ்வுகளைத் தூண்டி விட்டு ஒரு இலக்கை அடையச் செய்கிறது. இந்த பிரபஞ்ச நியதி அல்லது விதி, அந்த சம்பந்தப்பட்ட மனிதரின் பிறவிக் குணம், வளர்ந்த சூழ்நிலை, வாழ்க்கை அனுபவங்கள், எண்ணங்கள், அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன்றைய சூழ்நிலை, தேவை, மனநிலை, பாதுகாப்பின்மை (insecurity) என கணக்கிலடங்கா காரணிகளை நிர்ணயம் செய்கிறது. அவர் செய்யும் நன்மை, தீமைகள் அனைத்தும் அவர் பிராப்தப் (விதி) பிரகாரம் மட்டுமே நடக்கிறது. அந்த சம்பந்தப்பட்ட நபர் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்வது இல்லை, செய்யவும் முடியாது. 

நடக்கும் செயல்களை நாம் நம் மனதின் நிலைக்கேற்ப ஏற்றுக் கொள்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம். நாம் கற்றுக் கொண்டவைகளை அல்லது நமக்கு போதிக்கப்பட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு இது நல்லது இது கெட்டது, இது சிறந்தது, இது கீழ்த்தரமானது என்று நிர்ணயம் செய்து வைத்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு, கணவர் மது அருந்துவது என்பது, வெறுக்கத்தக்க செயல் ஆகும். மேல்தட்டு குடும்பத்தில் பிறந்து, மது அருந்துவது என்பது சமூக நட்பிற்கு தேவையானது (socializing) என்று பார்த்து வளர்ந்த பெண்ணிற்கு,  கணவர் மது அருந்துவது என்பது வாழ்வின் ஒரு அங்கம். நம் எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றார் போல் சம்பந்தப்பட்ட அந்த நபர் மாறுவது என்பது சாத்தியம் இல்லை.

பாசம் அல்லது காதல் என்ற உணர்வின் அடிப்படை, ஒருவரிடம் நமக்குத் தோன்றும் பாதுகாப்பு உணர்வு. ஒருவரால் நம் மனதில் தோன்றும் பாதுகாப்பு உணர்வு என்பது நம் எண்ணங்களில் மட்டுமே இருக்கிறது. அந்த நினைவுகளை அல்லது நம்மால் உருவாக்கப்பட்ட கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டு நாம் அவர்கள் மேல் பாசத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அவரே நம் சிந்தனைகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் போது, நமக்கு வெறுப்பு உண்டாகிறது. உயிர் உருகக் காதலித்து மணந்து கொண்டு, மனம் வெறுத்து விவாகரத்து செய்வது இதனால் தான். ஒருவருடைய நடத்தையை நாம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் போது தான் நமக்கு பாசமும், வெறுப்பும் தோன்றுகிறது. 

ஒரு விமானப்பணியாளர் (Air hostess/flight attendant) முதல் வகுப்பில் (business class) பயணம் செய்யும் பயணியிடம் மிகுந்த அக்கறை கொண்டு கவனித்துக் கொள்வார். பயணம் முடிவடைந்தும் அந்த நபர் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு அதே சேவையை எதிர்பார்த்தால், கடும் நடவடிக்கை எடுப்பார். அந்த  விமானப் பணியாளருக்கு, அந்த பயணியின் மேல் பாசமும் இல்லை. வெறுப்பும் இல்லை. அது போலவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொருவரும், அவரவர் பிராப்தப் பிரகாரம் செயல்கள் செய்து கொண்டிருக்க, நாம் அதை நமக்காக செய்கிறார் என்று எண்ணி பாசமும் அல்லது நம்மை பாதிக்கவே இதை செய்கிறார் என்று எண்ணி வெறுப்பும் கொள்கிறோம்.  இந்த இரண்டும் நம் எண்ணங்களில் உருவாகி, நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் கற்பனை மட்டுமே.

இந்த உலகில்,  இன்று வாழ்க்கையின் பெரும் பிரச்சனையாக இருப்பது உறவு முறை (relationship) தான். மனித மனங்கள் யாராவது ஒருவர் நம்மிடம் “தனிப்பட்ட முறையில்” நீ தான் வேண்டும், நீ மட்டுமே முக்கியம் என்று உண்மையான அன்பு செலுத்த மாட்டார்களா என்று ஏங்குகிறது.  அதனால் தான் பெற்றவர்கள் ஒரு குழந்தையை விட மற்றொரு குழந்தையின் மீது தனி கவனம் செலுத்தும் பொழுது, மற்ற குழந்தைக்கு வலிக்கிறது; அது நீங்கா வடுவாகிப்போகிறது. மனைவி தன் மீதி மட்டுமே அன்பாக இருக்கிறார் என்ற நிலை மாறி, அவர் வேறு ஒரு ஆணிடம் தொடர்பில் இருக்கிறார் என்று தெரியும் போது அது துரோகமாக பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் தன் வாழ்வையே இழக்கும் படியாக கொலையிலோ அல்லது தற்கொலையிலோ அந்த தனிப்பட்ட அன்பின் ஏக்கம் கொண்டு போய்விடுகிறது. அப்படி தனிப்பட்ட முறையில் நம் மீது மட்டுமே செலுத்தப்படும் அன்பு, பாசம் என்று ஒன்று இந்த உலகில் இருக்கிறதா? இல்லை என்பதை தான் இந்த சுலோகம் சொல்கிறது. அந்த அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒவ்வொருவரும் ஒரு காரியத்தை செய்கிறார்கள். அந்த காரியங்கள், நமக்கு நல்லதாக/உகந்ததாக இருக்கும் பொழுது அதை நம் மீதுள்ள தனிப்பட்ட அன்பின் வெளிப்பாடு என்று தவறுதலாக எடுத்துக் கொள்கிறோம். அதே நேரம், தீங்கு செய்வதாக இருக்கும் பொழுது அதை நம் மீது தனிப்பட்ட முறையில் கொண்ட வெறுப்பின் வெளிப்பாடு என்று தவறாக எடுத்துக் கொள்கிறோம். எல்லா நேரங்களிலும் காலத்தின் கட்டாயத்தில் சூழ்நிலை கைதிகளாகத்தான் ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள். நம்மீது உள்ள தனிப்பட்ட விருப்பின் வெறுப்பின் காரணமாக இல்லை என்பது தான் நிஜம், சத்தியம். அந்த சத்தியம் புரிந்த ஞானிகள் பாசப்பிணைப்பு என்ற வலையில் சிக்குவது இல்லை.

அன்பு, பாசப்பிணைப்பு இல்லை என்பதால் ஞானிகள் மரக்கட்டை போலவோ அல்லது சிலை போலவோ, கடுமையுடன், மற்றவர் படும் துயரத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள் அல்லது கண்டு கொள்ளாமல் இருப்பார்கள் என்பதில்லை. அவர்களிடம் பாசப்பிணைப்பு என்ற தேவையில்லாத ஒன்று தான் இல்லை ஆனால் அளவு கடந்த  காருண்யம் இருக்கிறது. தொழுநோய் கொண்டவர்களை கூட ஞானிகளால் தொட்டு சிகிச்சை  செய்ய முடிகிறது. விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கு நீதி செய்ய முடிகிறது. இதுவே காருண்யம். காருண்யம் என்பது மற்றவர்கள் துன்பப்படும்போது, மனதினால் எந்த உறவும் ஏற்படுத்திக் கொள்ளாமல், அவர்களின் வலியைக் குறைப்பதும், அவர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொள்வதும் ஆகும்.

உட்கருத்து: இந்த சுலோகத்தின் மூலமாக கிருஷ்ணர் நமக்கு சொல்வது, யாரும் நம்மை தனிப்பட்ட முறையில் ஆராதித்து நமக்கு நல்லதும் செய்வதில்லை, நம் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு கொண்டு தீமையும் செய்வதில்லை. மேலே விளக்கத்தில் சொன்னது போல், பிரபஞ்சத்தின் காலகாலமாக வந்த தொடர் நியதியின் பிரகாரம், சூழ்நிலை கைதிகளாக நாம் அனைவரும் செயல்படுத்தப்படுகிறோம். அங்கு இந்த தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. அப்படி தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை எனும் போது, நமக்கும் அவர்கள் மேல் அன்பு அல்லது வெறுப்பு வர அங்கு இடமில்லை. 

மேலே சொல்லப்பட்ட  விமானப் பணியாளர் விஷயத்தில் – அவருக்கு நம் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை; அவர் நடவடிக்கையை பார்த்து நமக்கும் அவர் மேல் எந்த விருப்பு, வெறுப்பும் ஏற்படுவது இல்லை. ஏனென்றால் விமானப் பணியாளரை நாம் நடுநிலையில் பாவிக்கிறோம். இந்த ஞானத்தை பகுத்தாய்ந்து ஞானிகள் பெற்றதால், அவர்கள் உலகில் உள்ள அனைவரையுமே நடுநிலையில் பாவிக்கிறார்கள். அவர்களுக்கு யார் மீதும், எந்த சூழ்நிலையிலும் பாசமும், வெறுப்பும் ஏற்பட வழியே இல்லை. அப்படிப்பட்ட ஒரு தெளிவான ஞானம் பெற்று அது நமக்குள் வேரூன்றி, அனிச்சையாக (Mind conditioning) இருக்கும் பொழுது, அது உறுதியான, தெளிவான, புரிதலால் நிலை நிறுத்தப்பட்ட உயர்ந்த ஞானமாகிறது.